×

தாமரை கட்சியில் போஸ்டிங் கேட்கவே நிர்வாகிகள் யோசிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கட்சி போச்சு… ஆதரவாளர்கள் குறைந்து போனாங்க, இருந்தாலும் குக்கரும், தேனியும் டென்ஷனில் ஏன் இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் சேலம்காரர், தேனிக்காரர் என 2 அணி இருக்கு. இதுல தீர்ப்புக்கு பிறகு சேலத்துக்காரர் கை ஓங்கியிருப்பதால் தேனிக்காரர் ஆதரவாளர்களான மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகளை தனது பக்கம் இழுக்க சேலம்காரர் முடிவு செய்தாராம். இதற்கான திரைமறைவு வேலைகள் தனியாக நடந்து வருதாம். இதற்கு அப்புறம்தான் தன் கவுரவத்தை கைவிட்ட தேனிக்காரர், குக்கர்கட்சியின் தலைவரை சந்தித்து பொலிட்டிக்கல் சூடு குறித்து பல மணிநேரம் ஆலோசனை செய்தாங்க. இதன் மூலம் இருவருக்கும் இடையிலான விரிசல் சற்று குறைந்து, நெருக்கம் அதிகரித்துள்ளாம்.

இந்த 2 பேரின் சந்திப்பு கடலோர, மனுநீதி சோழன், மலைக்கோட்டை மன்னர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் தேனிக்காரர், குக்கர் அணிகள் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளதாம். இதற்கு காரணம் இரண்டு பேரும் தனித்தனியாக இருந்தபோது ஒருவரை ஒருவர் துரோகிகள் என்ற ரேஞ்சில் செய்து கொண்ட பழைய விமர்சனம்தானாம். இந்த இரண்டு பேரின் ஆக்ரோஷத்தை உண்மை என்று நம்பி தொண்டர்களுக்குள்ளும் இந்த கட்சி மோதல் கடுமையாக இருந்ததாம். பழைய பகை, பழைய பிரச்னைகளை தலைவர்களான தேனிக்காரர், குக்கர்காரர் மறந்துவிட்டார்களாம். ஆனால், கட்சியின் 3ம் நிலையில் இருந்து தொண்டர்கள் வரை பழைய வசைகள், பிரச்னைகள், அடிதடிகளை மறக்கவில்லையாம். இதுதான் இப்போதைக்கு டெல்டா மாவட்டம் முழுவதும் ஹாட் டாபிக்காக இருக்காம்.

மன்னர் மாவட்டத்தில் இனி எந்த அணி மாவட்டத்தில் கோலோச்சுவது என தேனிக்காரர் ஆதரவாளரான மாஜி நகர்மன்ற தலைவருக்கும், குக்கர் ஆதரவாளரான நடிகர் பெயரான கார்த்திக்கும் இடையே தற்போது பனிப்போர் தொடங்கியுள்ளது. வரும் காலங்களில் இது பெரிய அளவில் வெடிக்க கூடும் என பேச்சு ஓடுவதால் தேனிக்காரர், குக்கர் தலைமை நிர்வாகிகள் மீது உச்சகட்ட டென்சனில் உள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சொந்த கட்சிக்காரர்களையே நம்பாமல் உறுதி மொழி வாங்கும் அரசியல்வாதி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘அரசியலில் மதத்தையும், தெய்வ பக்தியையும் கலப்பது என்பது தாமரை கட்சியினருக்கு கை வந்த கலை.

அதனை 2024 பொது தேர்தலுக்கு அவர்கள் இப்போதே பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கட்சியின் மூத்த தலைவரான பொன்னானவர் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகளை வீடு வீடாக சந்தித்து குல தெய்வம் சாட்சியாக தாமரை கட்சியைதான் வரும் தேர்தலில் வெற்றிபெற செய்வேன் என படிவத்தில் எழுதி உறுதிமொழியாக வாங்குகிறார்களாம். இதில் சொந்த கட்சிகாரர்களைத்தான் பூத் கமிட்டியாக தாமரை கட்சி நியமித்துள்ளது, சொந்த கட்சிகாரர்களிடமே நம்பிக்கையில்லாமல் எப்படி தேர்தலை சந்திக்கப்போகிறார்கள் என்று கேட்டுவிட்டு கையெழுத்து போட்டுவிட்டு அமைதியாக வீட்டில் வேலை பார்க்க போறாங்களாம்… அரசியல்ல எது வேண்டுமானாலும் மாறும்… அதற்காக சத்தியம் கேட்பது டூ மச்…’’ என்று பேசிக் கொள்கிறார்களாம் அந்த மாவட்ட அரசியல்வாதிகள் என்றார் விக்கியானந்தா.

‘மத்தியில ஆட்சியில இருந்தாலும் மாநிலத்தில் கட்சிக்காரர்களிடம் வசூலில் கலக்கும் கட்சியை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மதுரை மாநகர் மாவட்ட தாமரையின் தலைவராக டாக்டர் இருந்தார். அவர் மாநில தலைவருடன் சேர்ந்து, அவரது ஆதரவாளர்களுக்கு அனைத்து பதவிகளையும் பெற்றுத்தந்தார். தலைவர் மலையை, மலைபோல் நம்பி கோடிக்கணக்கில் செலவு செய்து, கடைசியில் டாக்டர் கடனாளியானாராம். மலையும் கைகழுவிட்டார். தற்போது டாக்டர் வேறு கட்சிக்கு தாவிவிட்டார். தற்போது, மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக மலையின் தீவிர ஆதரவாளரான ‘மெகா’ கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட அவர், டாக்டர் நியமித்த அத்தனை பேரையும் பதவியில் இருந்து நீக்கினார்.

டாக்டரை போல், மாநில தலைமை மலையை நம்பி நாமும் டாக்டரை போல நடுத்தெருவில் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளாராம். தற்போது, மதுரை மாநகர் மாவட்டத்தில் தாமரை கட்சியில் பல்வேறு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் நடைபெறுகிறது. கட்சி விசுவாசியெல்லாம் தேவையில்லை. காசு இருந்தால், பக்கத்தில் வா, பதவி வேண்டுமா, குறைந்தது ஐந்து லகரம் கொடு, பதவி வாங்கிக்கோ. இது எனக்கு மட்டுமல்ல, மாநில தலைமைக்கும் சேர்த்துதான் என்று அசராமல் பேசுகிறாராம். இவரின் இந்த செயலை கண்டு, தாமரையில் ஐக்கியமாகிய சூப்பர் ஸ்டார் மன்றத்தின் முன்னாள் தலைவர் வெலவெலத்து விட்டாராம். ‘மெகா பணப்பேய் பிடித்து அலைகிறார்.

தலைமை இவரை கண்டுகொள்ளவில்லை’ என கடுமையாக எதிர்த்து ஆடியோ வெளியிட்டு, தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளாராம், இது தான் தூங்கா நகரத்தில் ஹாட் டாபிக்காக உள்ளது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குற்றவாளிகளின் வீட்டில் கஞ்சா சிக்கலாம்… சிறையில் சிக்கியதால் காக்கிகள் பதற்றத்தில் இருக்காங்களாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் சென்ட்ரல் ஜெயில்ல கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், கடந்த 2 நாளைக்கு முன்னால ஸ்பெஷல் டீம் அதிரடி ரெய்டு நடத்துனாங்க. இதுல, டவர் 2 ஏரியாவுல இருக்குற கைதிகளோட, பாத்ரூம்ல 10 கிராம் கஞ்சா சிக்கியது. அங்க இருக்குற 3 கைதிங்க அந்த கஞ்சாவை பதுக்கி வச்சாங்களாம்.

இதுதொடர்பாக பாகாயம் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து எப்படி அவங்களுக்கு கஞ்சா கிடைச்சதுன்னு விசாரிச்சுட்டு இருக்காங்க. குறிப்பா ஜெயில்ல கருப்பு ஆடுங்க இருக்குதான்னு விசாரணை தீவிரமாகி இருக்கு. கஞ்சா வழக்குல சிக்கிய 3 கைதிங்க சமீபத்துல சென்னையில இருக்குற கோர்ட்டுக்குதான் விசாரணைக்கு போய்ட்டு வந்தாங்களாம். அப்போ கஞ்சா சப்ளை நடந்ததா என போலீசாருக்கு சந்தேகம் இருக்கு. அதேபோல் சமீபத்துல கைதிகளை சந்திச்சவங்க யாருன்னும் பட்டியலிட்டு விசாரிக்க போறாங்களாம். எப்படி இருந்தாலும் காவலர்களின் பாதுகாப்பை மீறி கைதிகளுக்கு கஞ்சா கிடைக்க வாய்ப்பில்லாததால, கஞ்சா சப்ளைக்கு துணை போனவங்க நிச்சயம் சிக்குவாங்க என்ற தகவல் ஜெயில்ல உள்ள காவலர்களின் வயிற்றை கலக்கி வருதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post தாமரை கட்சியில் போஸ்டிங் கேட்கவே நிர்வாகிகள் யோசிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Lotus ,wiki ,Peter Uncle ,Dinakaran ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்