×

2,000 நோட்டை திரும்ப பெறும் அறிவிப்பு; நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த ஒன்றிய அரசு முயற்சி: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திருவாரூர்: திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாபஸ் பெறுவதால் மட்டுமே கருப்பு பணம் ஒழியுமா? கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் யாரும் ரூபாய் நோட்டுகளாக வைத்திருக்க மாட்டார்கள். தங்கமாகவோ, வைரமாகவோ, நிலமாகவோ, சொத்துக்களாகவோதான் வைத்திருப்பார்கள். எனவே நாட்டில் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என்ற ஐயப்பாடு எழுகிறது. ரூ.2 ஆயிரம் நோட்டை தடை செய்தால் அதற்கு ஈடாக ரூ.500 நோட்டுகள் இருப்பு வைத்துள்ளார்களா. தேவைக்கு ஏற்ப மக்கள் பணத்தை எடுத்து பயன்படுத்த முடியாத நிலை தான் ஏற்படும். மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியையும், குழப்பங்களையும் உண்டாக்க மோடி முயல்கிறார்.

செப்டம்பர் மாதத்திற்குள் ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு ஈடாக மற்ற ரூபாய் நோட்டுகள் வந்துவிடுமா? இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா இது பற்றி ஒன்றிய அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள், விவசாயிகள் மீதுதான் இடி விழும். பெரிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. சாமானிய மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

The post 2,000 நோட்டை திரும்ப பெறும் அறிவிப்பு; நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த ஒன்றிய அரசு முயற்சி: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,Balakrishnan ,Thiruvarur ,Secretary of State ,Marxist Communist Party ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...