×

நான்கு நாட்கள் கடந்தும் நீடிக்கும் சஸ்பென்ஸ் முதல்வர் பதவியேற்பு விழா திடீர் ஒத்திவைப்பு: கார்கேவை முதல்வராக்க டி.கே.சிவகுமார் ஆதரவால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் யார் சட்டமன்றத் குழு தலைவர் தேர்வு செய்யப்படுவது தொடர்பாக நான்காவது நாளாக நீடிக்கும் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை. இதற்கிடையே இன்று நடத்த திட்டமிட்டிருந்த பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கார்கேவை முதல்வராக்க டி.கே.சிவகுமார் ஆதரவளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் மூலம் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பிடித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமார் இடையே ஏற்பட்ட போட்டியால் ஏற்பட்ட குழப்பத்தை தீர்க்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சித்தராமையா மற்றும் சிவகுமார் ஆகிய இருவரும் முதல்வர் பதவி வேண்டும் என்று டெல்லியில் முகாமிட்டு முதல்வர் பதவி கேட்டு அடம் பிடித்து வருகிறார்கள். இருவரையும் சமாதானம் செய்ய மேலிட தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று காலை ராகுல்காந்தியை சித்தராமையா சந்தித்து சுமார் 30 நிமிடம் பேசினார். அப்போது சட்டமன்ற குழு தலைவராக நீங்கள் (சித்தராமையா) தேர்வு செய்யப்படுகிறீர்கள். பெஸ்ட் ஆப் லக் என்று கூறி, வாசல் வரை வந்து வழியனுப்பினார். இதனால் முதல்வர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததாக தகவல் வெளியாகியது. இந்த தகவல் வெளியாகியதும் கர்நாடக மாநிலம் முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சித்தராமையாவின் உருவ படத்திற்கு பாலாபிஷேகம் செய்தனர்.

பதவியேற்பு விழா ஏற்பாடு: இதனிடையில் மாநில முதல்வராக சித்தராமையா இன்று பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடத்தப்படும் என்று மாநில தலைமை செயலாளர் பெயரில் அழைப்பிதழ் வெளியாகியது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பெங்களூரு கண்டீரவா விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் புயல் வேகத்தில் நடந்தது. போலீஸ் அதிகாரிகள், விளையாட்டு அரங்க அதிகாரிகள் இருக்கை அமைப்பது, சிவப்பு கம்பளம் விரிப்பு, பந்தல் அமைப்பு என தடபுடலாக பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நடந்தது.

கார்கே முதல்வர்: சிவகுமார் ஆதரவு: இதனிடையில் ராகுல்காந்தியை சந்தித்து பேசியபின், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டிற்கு சென்ற சிவகுமார், அவருடன் 45 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எனக்கும் வேண்டாம்,. சித்தராமையாவுக்கும் வேண்டாம். கட்சியின் மூத்த தலைவராக நீங்கள் முதல்வர் பொறுப்பு ஏற்று கொள்ளுங்கள் என்று புது குண்டை சிவகுமார் தூக்கி போட்டார். இந்நிலையில் பெங்களூரு கண்டீரவா விளையாட்டு அரங்கில் இன்று பகல் நடத்த திட்டமிட்டிருந்த பதவியேற்பு விழாவை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* மீண்டும் குழப்பம்
டெல்லியில் நேற்று காலை சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து பேசிய டி.கே.சிவகுமார், தனக்கு தான் முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக தெரிவித்தார். அவரை சமாதானம் செய்ய இரு தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. தனக்கு முதல்வர் பதவி கொடுக்கவில்லை என்றால், அமைச்சரவையில் இடம் பெற மாட்டேன் என்றும் உறுதியாக தெரிவித்தார். ராகுல் காந்தியுடன் 1 மணி நேரம் சிவகுமார் பேசினார். ஆனால் தனது பிடிவாதத்தை அவர் கைவிடவில்லை. இதனால் சித்தராமையா பதவியேற்பதில் குழப்பம் ஏற்பட்டது.

The post நான்கு நாட்கள் கடந்தும் நீடிக்கும் சஸ்பென்ஸ் முதல்வர் பதவியேற்பு விழா திடீர் ஒத்திவைப்பு: கார்கேவை முதல்வராக்க டி.கே.சிவகுமார் ஆதரவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sudde ,Chief Minister ,T.K. K.K. Stirge ,Sivamar ,Bengaluru ,Karnataka ,Legislative Committee ,Congress Party ,Stipulation ,Karke ,K.K. ,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...