×

வீரபாண்டி கன்னிமார்குளம் கண்மாய் பகுதியில் சிறுவர் பூங்காவுடன் படகு குழாம் அமைக்கப்படுமா?: எதிர்பார்ப்பில் தேனி மாவட்ட மக்கள்

தேனி: தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியான போடி விலக்கில் உள்ள கன்னிமார்குளம் கண்மாய் பகுதியில் சிறுவர் பூங்காவுடன் படகு குழாம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவதானப்பட்டி, வருசநாடு, போடிமெட்டு போன்ற பகுதிகளை மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் அருவிகள், மலைகள், அணைகள், நதிகள், குளங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது.

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழை மற்றும் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால், தேனி மாவட்டத்தில் உள்ள நதிகள், குளங்களில் நீர்வரத்து இருக்கும். தேனி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 18 ஊராட்சிகள் உள்ளன. தேனி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாக உள்ளது. தேனி அருகே சுருளிஅருவி, கும்பக்கரை அருவி, வைகை அணை, குரங்கனி ஆகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இதுதவிர கேரள மாநிலத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களான தேக்கடி, மூணாறு போன்ற சுற்றுலாத் தலங்களும் தேனி மாவட்டத்தின் அருகே உள்ளன.

தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும், கேரள மாநிலத்தின் தேக்கடி, மூணாறு போன்ற இடங்களுக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.மேலும், கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தேனி மாவட்டம் வழியாக கொடைக்கானல், பழநி, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மகளிர் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நீர்நிலை மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறார்.

இதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றியத்திலும் ரூ.பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, புதிய வீட்டு மனையிடங்கள் விற்பனை செய்யப்படும் போது ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஓஎஸ்ஆர் எனப்படும் அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்களை பாதுகாத்து பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்து செல்வோர் பெரும்பாலும் தேனி அருகே உள்ள புகழ்பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கும், குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயிலுக்கு வந்து செல்வதை வாடிக்கையாக்கி உள்ளனர்.

இதில் தேனியில் இருந்து குமுளி செல்லும் சாலையில் வீரபாண்டி உள்ளதால் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். சுற்றுலாவாக தேனி மாவட்டம் வரும்போது மட்டுமல் இல்லாமல் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு திருவிழாவின் 8 நாட்களும் வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்புவாய்ந்த வீரபாண்டி பேரூராட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களாக எதுவும் இல்லாமல் உள்ளது. வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையும், போடி விலக்கில் கொச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் கன்னிமார்குளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாயானது முல்லைப்பெரியாறு அணையின் கடைமடை கண்மாயாகவும் உள்ளது. இதனால் இக்கண்மாயில் தண்ணீர் தேங்கும் போது, இவ்வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்களில் இருந்து பயணிகள் இறங்கி கண்மாயில் நீராடி சென்று வருகின்றனர்.

இக்கண்மாய் பகுதியில் சிறுவர் பூங்கா மற்றும் நடைபயிற்சிக்கான நடைமேடை அமைத்தால் தேனி நகரின் விரிவாக்க பகுதியாக உள்ள இப்பகுதியில் குடியிருப்போருக்கான மிகச் சிறந்த இடமாக மாறும். மேலும், இக்கண்மாயில் படகுத் துறை அமைத்தால் இக்கண்மாயை கடந்து சுருளிஅருவி, தேக்கடி, மூணாறு, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு கார் மற்றும் வேன்களில் செல்லும் பயணிகள் கன்னிமார் குளம் கண்மாயில் அமைக்கப்படும் சிறுவர் பூங்காவில் இளைப்பாறவும், வாகனங்களில் வரும் பயணிகள் படகுகளில் சவாரி செய்து மகிழவும் வாய்ப்பு உண்டாகும். தேனி நகராட்சிக்குட்பட்ட மீறுசமுத்திரம் கண்மாயில் நடைபயிற்சி மேடை மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் பொதுப்பணித்துறை அனுமதிக்காக நகராட்சி நிர்வாகம் காத்திருக்கிறது.

இதேபோல வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கன்னிமார்குளத்தில் பூங்கா மற்றும் படகுத்துறை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றணும்
வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசியிடம் கேட்டபோது, ‘‘வீரபாண்டி பேரூராட்சியில் புகழ்பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது.இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதேபோல வீரபாண்டி வழியாக தேக்கடி, மூணாறு சுற்றுலாத தலங்களுக்கும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். எனவே, வீரபாண்டியை தெய்வத்தலமாக மட்டுமல்லாமல் சிறந்த சுற்றுலாத்தலமாகவும் மாற்ற வேண்டும். இதற்கு போடி விலக்கில் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள கன்னிமார்குளத்தில் சிறுவர் பூங்கா அமைக்கவும், அங்கு படகு குழாம் அமைக்கவும் பொதுப்பணித்துறை அனுமதி அளித்தால் வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகமே இதற்கான நிதிக்கு ஏற்பாடு செய்து தரமான சிறுவர் பூங்கா மற்றும் படகுத்துறை அமைக்க தயாராக உள்ளது. இதற்கு பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post வீரபாண்டி கன்னிமார்குளம் கண்மாய் பகுதியில் சிறுவர் பூங்காவுடன் படகு குழாம் அமைக்கப்படுமா?: எதிர்பார்ப்பில் தேனி மாவட்ட மக்கள் appeared first on Dinakaran.

Tags : Veerapandi Kannimarkulam Kannimai ,Theni District ,Kannimarkulam Kannamai ,Bodi Vidu ,Veerabandy Boreotish ,Theni ,Weerapandi Kannimarkulam Kannimarkulam Eye Area Boys Park ,Honey District ,
× RELATED பார்வை மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்