வருசநாடு: தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நதிகள், குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும். இதில் உள்ள ஆபத்தை அறியாமல் விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் நீர்நிலைகளில் குளிக்கின்றன. தண்ணீர் ஓடும் வேகம் அதிகரித்துள்ளது. ஆனால் இதனை உணராமல் சிலர் ஆபத்தான குளியலை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். தண்ணீரின் வேகமான சுழலில் சிக்கிய பலர் கடந்த காலங்களில் இழுவைத் தண்ணீர் அடித்து சென்று உயிர்பலிகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் இக்காலத்தில் உரிய கவனம் எடுத்து ஆறுகளில் குளிக்க வருபவர்கள், துவைக்க வருபவர்கள் என அனைவரையும் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அதிக மழைபெறும் காலங்களில் நீர்வரத்து அதிகரித்தால், ஆற்றங்கரைப்பகுதிகளில் வசிக்கின்ற பொது மக்கள் கவனமுடனும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை ஆற்றங்கரைப்பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க கூடாது. நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாமென ஒலிபெருக்கி மூலம் உள்ளாட்சி அமைப்பினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. அதுபோல் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகள் அதிக மழைபொழிவு ஏற்படும் காலங்களில் மழைநீரில் நெற்பயிர் மூழ்கியுள்ள தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வயல்களில் தண்ணீரை வடித்திட வேண்டும். வயலில் தேங்கியுள்ள நீரை வயல் மட்டத்தை விட ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்துவிட வேண்டும்.
மேலும் சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றிட மர அறுவை இயந்திரம், ஜே.சி.பி போன்ற இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, மின்சார வாரியம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகளுக்கு மாவட்ட சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பெரியாறு, வைகை அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் கோடை மழையால், இப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் , கண்மாய்கள் மற்றும் நீர் நிலைகளும் நிறைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் ஆபத்தை உணராமல் நீர்நிலைகளில் குளித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், பாலக்கோம்பை அருகே ராயவேலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் அன்பரசன்(33). வேலுச்சாமியின் மகள் ஜெயந்தி நேற்றுமுன்தினம் மதியம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த அக்னிச்சட்டி எடுக்க சென்றார். இவருடன் இவரது சகோதரர் அன்பரசனும் சென்றார். அப்போது அன்பரசன் முல்லையாற்றில் குளிக்கச் சென்றார். குளிக்கச் சென்றவர் காணாமல் போனதால் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். இதில் அன்பரசன் முல்லையாற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. கம்பம் செக்கடி தெரு வை சேர்ந்தவர் முகமது ராஜிக் (45). இவருக்கு திருமணமாகி ஒரு மனைவியும் 4 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர் சென்னையில் ஓட்டல் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 18ம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊரான கம்பத்திற்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.
இவரின் 2வது மகன் சையது சுல்தான் இப்ராஹிம் (16) தனது நண்பர்களுடன் கம்பம் சுருளிப்பட்டி ரோட்டில் உள்ள தொட்டமாந்துறை ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். நண்பர்களுடன் விளையாடிக்கொண்டே ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார். ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி இறந்துள்ளாார். அதுபோல், தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரம் மருதகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் வராகநதி ஆற்றில் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சிவாதாஸ் (30) மற்றும் இவரது மனைவி ரியாதாஸ் (28). இவர்களது ஒன்றரை வயதான பெண்குழந்தை சியாதாஸ், வராகநதி ஆற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, குழந்தை ஆற்றில் தவறி விழுந்து இறந்து விட்டது.
நொடிகளில் இழுத்து விடுகிறது
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதால், ஆபத்தை உணராமல் குளிப்பதும், உற்சாகமாக துவைப்பதும் அதிகமான அளவில் நடக்கிறது. பள்ளங்கள் அதிகமான அளவில் ஏற்பட்டுள்ளதால் எந்த இடம் மிகவும் ஆபத்தான இடம் என தெரியாமல் மாணவர்கள், சிறுவர்கள் துள்ளிக்குதித்து ஆற்றில் குளியல் போடுகின்றனர். இதனால் நீச்சல் தெரிந்தவர்களை கூட நொடிகளில் இழுத்து சென்றுவிடுகிறது. தண்ணீரில் மூழ்குபவர்கள் சில நிமிடங்களில் மூச்சுத்திணறி இறக்கும் நிலை உள்ளது. எனவே பெற்றோர், தங்களது பிள்ளைகளை மிக கவனமாக பார்ப்பதுடன் ஆற்றில் சென்று குளிக்க வேண்டாம் என அறிவுரை வழங்க வேண்டும்,’’ என்றனர்.
The post தேனி மாவட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து குழந்தைகளை ஆற்றங்கரையோரங்களுக்கு அனுமதிக்காதீர்கள்: கடந்த சில வாரங்களில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.
