×

ஏனாமில் 7 பெண்கள் விபத்தில் பலி ஆம்னி பஸ் டிரைவரை கைது செய்ய ஆந்திர போலீசார் தீவிரம்

புதுச்சேரி, மே 16: ஏனாமில் 7 பெண்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆம்னி பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் ஏனாமைச் சேர்ந்த 7 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட ஏனாம் பிராந்தியம், ஆந்திராவை ஒட்டி அமைந்துள்ளது. ஏனாம், நீளாப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பலர், ஆந்திர மாநிலம், தலசேவு பகுதியில் உள்ள தனியார் இறால் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இங்கு பணிபுரியும் 14 பெண்கள் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு ஆட்டோ ரிக்‌ஷாவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

தலரேவு பைபாஸ் சாலையில் வந்தபோது அமலாபுரத்தில் இருந்து காக்கி நாடா நோக்கி வந்த ஆம்னி பஸ், எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் மேட்டக்குழு கிராமத்தைச் சேர்ந்த செஸ்டி வெங்கடலட்சுமி (41), குர்சம்பேட்டாவைச் சேர்ந்த நிம்மகயாலா லட்சுமி (54), ஏனாம் வெங்கண்ணா நகர் சிந்தப்பள்ளி ஜோதி (36), காலி பத்மா (38), பிரான்சிதிப்பா பகுதியைச் சேர்ந்த போக்கா ஆனந்தலட்சுமி (47), சத்தியவதி (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் படுகாயமடைந்த 7 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. முதல்கட்டமாக விபத்துக்கு காரணமான தனியார் ஆம்னி பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். இதுதொடர்பாக ஏனாம் எஸ்பி ரகுநாயகத்துக்கு ஆந்திர காவல்துறை தகவல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

The post ஏனாமில் 7 பெண்கள் விபத்தில் பலி ஆம்னி பஸ் டிரைவரை கைது செய்ய ஆந்திர போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Enam ,Andhra Police ,Puducherry ,bus ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!