×

கர்நாடகா முதல்வர் தேர்வில் தொடர்ந்து இழுபறி காங்கிரஸ் தலைமை இன்று முடிவு? டெல்லியில் மேலிட தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் யாரை முதல்வராக்குவது என்பது தொடர்பாக கட்சித் தலைமை இன்று முடிவு செய்யும் என்று தெரிய வருகிறது. முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து ஏற்பட்டுள்ள தொடர் இழுபறியால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் மூலம் தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார், எதிர்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.எச்.முனியப்பா உள்பட பலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக புதிதாக வெற்றி பெற்ற கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள சாங்கிரிலா ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வருமான சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் நடந்த கூட்டத்தில் புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்றத் குழு தலைவர் தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அளித்து ஒரு வரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்துள்ள மேலிட பார்வையாளர்கள் ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் யாரை கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யலாம் என்று கருத்து கேட்டு பதிவு செய்தனர். பெரும்பாலான எம்எல்ஏக்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்றத் குழு தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக டெல்லியில் நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொள்ளும்படி டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று பகல் 12.40 விமானத்தில் பெங்களூருவில் இருந்து டெல்லி சென்ற சித்தராமையா, அங்கு தனியார் ஓட்டலில் தங்கினார். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், குடும்பத்தினருடன் சில கோயிலுக்கு சென்றார். கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் என பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். வயிற்று வலி காரணமாக டெல்லி செல்லவில்லை என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்றிரவு டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மேலிட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சித்தராமையா, கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜேவாலா, கட்சியின் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்பட கட்சியின் மூத்த தலைவர் கலந்து கொண்டனர். பெங்களூருவில் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் தனி தனியாக எம்எல்ஏக்களிடம் கேட்டு பெற்ற விவரங்களை சுஷில்குமார் ஷிண்டே தலைமையிலான மேற்பார்வையாளர் குழு கொடுத்தது. இந்த கூட்டத்தில் யார் அடுத்த முதல்வர் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் யார் அடுத்த முதல்வர் என்பது குறித்து முடிவு செய்யவில்லை. யார் முதல்வர் என்று இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு துணை முதல்வர்கள்: இதனிடையே மூத்த எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் வகையில் ஒரு முதல்வருடன் நான்கு துணை முதல்வர் பதவி உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் இதில் லிங்காயத்து, பட்டியலினம், இஸ்லாமியர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளதாக நம்ப தகுந்த வட்டாரம் மூலம் தெரிய வருகிறது.

* 30 மாதம் முதல்வர் திட்டம்?
முதல்வர் பதவிக்கு சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் இருவருக்கும் சம தகுதி கொடுக்கும் வகையில் கட்சி மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜிவாலா முயற்சி மேற்கொண்டு இருவரிடமும் பேசும் போது, இருவரும் தலா 30 மாதம் பதவியில் இருங்கள் என்று ஆலோசனை வழங்கினார். ஆனால் இரு தலைவர்களும் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக தெரியவருகிறது.

* மடாதிபதிகள் லாபி
கர்நாடக மாநிலத்தில் எந்த பிரச்னையாக இருந்தாலும் மடாதிபதிகள் பங்களிப்பு இருக்க தான் செய்கிறது. மடாதிபதிகள் தங்கள் வகுப்பை சேர்ந்தவர் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள். இம்முறை காங்கிரஸ் கட்சியின் அபார வெற்றிக்கு காரணமாக இருந்த டி.கே. சிவகுமாருக்கு முதல்வர் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி நிர்மாலனந்தநாதசுவாமி மற்றும் நோவினகெரே மடத்தின் மடாதிபதி ஆகியோர் மட்டுமில்லாமல் அகில இந்திய ஒக்கலிக சங்கமும் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் வெற்றிக்கு கடந்த 2013 முதல் 2018 வரை சித்தராமையா முதல்வராக இருந்த போது கொண்டு வந்த அன்னபாக்கியா உள்ளிட்ட முற்போக்கு திட்டங்கள் காரணம் என்று கனக குரு பீடத்தின் மடாதிபதி கூறி இருப்பதுடன் சித்தராமையாவை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

* எனது தலைமையின் கீழ் 135 இடங்களை காங்கிரஸ் வென்றது: டி.கே.சிவகுமார் பேட்டி
எனது தலைமையின் கீழ் 135 இடங்களை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்றது என்று முதல்வர் பதவி போட்டியில் இருக்கும் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘ எனது தலைமையின் கீழ் கட்சி 135 இடங்களை தேர்தலில் வென்றுள்ளது. நாடு முழுவதும் கர்நாடக காங்கிரசை புகழ்ந்து வருகிறார்கள். உள்ளூர் மட்டத்தில் இன்னும் எதிபார்த்த ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் காங்கிரஸ் நிறைய இடங்களை பிடித்திருக்கும். தோல்வி அடையும் போது மனம் தளரக்கூடாது. வெற்றி அடையும் போது தாராள மனம் வேண்டும் என்று சோனியா கூறியுள்ளார். அப்படித்தான் 2019 முதல் கட்சியை காப்பாற்றி வந்தேன். தனியாளாக வழிநடத்தி மேலிடம் கேட்டுக்கொண்டது போன்று 135 இடங்களை அவர்களுக்கு வழங்கியுள்ளேன். அவர்கள் எடுக்கும் முடிவுக்கும் கட்டுப்படுவேன்’ என்றார்.

The post கர்நாடகா முதல்வர் தேர்வில் தொடர்ந்து இழுபறி காங்கிரஸ் தலைமை இன்று முடிவு? டெல்லியில் மேலிட தலைவர்கள் முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Congress ,Karnataka CM ,Delhi ,Bangalore ,Karnataka ,Congresses ,CM ,Dinakaran ,
× RELATED மோடியின் உத்தரவாதம் தடயம் இன்றி மறைந்தது: ப.சிதம்பரம் விமர்சனம்