×

கில் – சாய் ஜோடி அபார ஆட்டம் குஜராத் 188 ரன் குவிப்பு: 5 விக்கெட் வீழ்த்தினார் புவி

அகமதாபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது.
மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீசியது. சாஹா, ஷுப்மன் கில் இணைந்து குஜராத் இன்னிங்சை தொடங்கினர். புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரிலேயே சாஹா டக் அவுட்டாகி வெளியேற குஜராத் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து வந்த சாய் சுதர்சன் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய கில் 22 பந்தில் அரை சதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் – சாய் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 146 ரன் சேர்த்து அசத்தியது. சுதர்சன் 47 ரன் (36 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி யான்சென் வேகத்தில் நடராஜன் வசம் பிடிபட்டார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 8, டேவிட் மில்லர் 7, ராகுல் திவாதியா 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய கில் சதத்தை நிறைவு செய்தார்.

கில் 101 ரன் (58 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி புவனேஷ்வர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் அப்துல் சமத் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ரஷித் கான், நூர் அகமது (ரன் அவுட்), முகமது ஷமி கோல்டன் டக் அவுட்டாகி அணிவகுக்க, குஜராத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது. ஒரு கட்டத்தில் 220 ரன்னுக்கு மேல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சன்ரைஸ் வீரர்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். புவனேஷ்வர் வீசிய கடைசி ஓவரில் மட்டுமே 4 விக்கெட் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் புவி 4 ஓவரில் 30 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். யான்சென், நடராஜன், பரூக்கி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 189 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

The post கில் – சாய் ஜோடி அபார ஆட்டம் குஜராத் 188 ரன் குவிப்பு: 5 விக்கெட் வீழ்த்தினார் புவி appeared first on Dinakaran.

Tags : Gill - Sai ,Gujarat ,Bhuvi ,Ahmedabad ,IPL ,Sunrisers Hyderabad ,Gujarat Titans ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை