×

2வது இன்னிங்சில் பனி மாற்றத்தை ஏற்படுத்தியது: தோல்வி குறித்து டோனி பேட்டி

சென்னை: ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடந்த 61வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 48 (34பந்து) ரன்அடித்தனர். கேகேஆர் பவுலிங்கில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய கேகேஆர் அணியில் குர்பாஸ்1, வெங்கடேஷ் 9, ஜேசன் ராய் 12 ரன்னில் வெளியேற
ரிங்குசிங் 54ரன்னில் (43 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்அவுட் ஆனார். 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 147ரன் எடுத்த கேகேஆர் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் நடப்பு சீசனில் ஏற்கனவே மோதிய போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக்கொண்டது.

கேப்டன் நிதிஷ் ரானா 57 (44பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஸ்சல் 2 ரன்னில் களத்தில் இருந்தனர். ரிங்கு சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். 13வது போட்டியில் 6வது வெற்றி பெற்ற கேகேஆர் 7வது இடத்தில் உள்ளது. வெற்றிக்கு பின் கேகேஆர் கேப்டன் ரானா கூறியதாவது: இந்த வெற்றிக்கு பயிற்சியாளர் சந்திரகாந்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் நாங்கள் பேட்டிங் செய்வதற்கு முன், அவர் பெரிய ரோலரை ஆடுகளத்தில் பயன்படுத்த கூறினார். ஆனால் பெரிய ரோலரை பயன்படுத்தினால் ஆடுகளம் இன்னும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிவிடும் என நான் பயந்தேன்.

கடைசியில் அவர் கொடுத்த ஐடியாவால்தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் எதிர்பார்த்தபடி 2வது இன்னிங்சில் பந்து திரும்பவே இல்லை. இது எங்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது. இன்று பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். கடைசி ஆட்டத்திலும் வெற்றி பெறுவோம் என நினைக்கிறேன், என்றார். தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் டோனி கூறுகையில், ” நாங்கள் பந்து வீசும் போது முதல் பந்திலேயே தெரிந்து கொண்டேன் குறைந்தது 180 ரன் அடித்திருக்க வேண்டும் என்று. ஆனால் இந்த ஆடுகளத்தில் 180 ரன் எடுத்திருக்க வாய்ப்பில்லை.

2வது இன்னிங்ஸில் பனி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட்டில் தட்பவெப்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம். எந்த ஒரு பந்து வீச்சாளரையும் குறை சொல்ல முடியாது. துபே ஆடிய விதம் மிகவும் மகிழ்ச்சி. அவர் தொடர்ந்து தன்னை மெருகேற்றிக் கொண்டே வருகிறார். தீபக்சஹார் சிறப்பாக பந்து வீசினார். அவரால் 2 பக்கமும் பந்தை ஸ்விங் செய்ய முடிகிறது. பீல்டிங்கிற்கு ஏற்ப பந்து வீசவும் தன்னை முன்னேற்றி இருக்கிறார், என்றார்.

அனுபவம் உதவியது
ஆட்டநாயகன் ரிங்கு சிங் கூறுகையில், நான் களம் இறங்கிய போது 3 விக்கெட் இழந்திருந்ததால், பொறுமையாக ஆடவேண்டி இருந்தது. உள்நாட்டு கிரிக்கெட்டிலும் நான் 5, 6 வரிசையில் பேட்டிங் செய்கிறேன். அதனால் அனுபவம் எனக்கு உதவியது. நான் நன்றாக பேட்டிங் செய்ய கடினமாக உழைத்தேன், அதுவே எனக்கு நம்பிக்கையை அளிக்கிறது, என்றார்.

சட்டையில் டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கிய கவாஸ்கர்


சேப்பாக்கத்தில் சென்னை 7 போட்டிகளில் ஆடி 4ல் வெற்றி, 3வது தோல்வி சந்தித்துள்ளது. நேற்றுடன் சேப்பாக்கத்தில் லீக் போட்டிகள் முடிந்தது. நேற்று ஆட்டம் முடிந்தபின்னர். டோனி மற்றும் வீரர்கள் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். டென்னிஸ் பால்களை ரசிகர்கள் கூட்டத்திற்குள் டோனி அடித்தார். ஜெர்சி, கையுறைகளை கேலரியில் இருந்த ரசிகர்களுக்கு வீரர்கள் வீசி எறிந்தனர். மாஜி வீரர் சுனில் கவாஸ்கர் ஓடிவந்து தனது சட்டையில் டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கினார். சேப்பாக்கத்தில் லீக் போட்டி முடிந்தாலும், வரும் 23ம் தேதி குவாலிபயர் 1, 24ம் தேதி எலிமினேட்டர் போட்டிநடைபெற உள்ளது.

The post 2வது இன்னிங்சில் பனி மாற்றத்தை ஏற்படுத்தியது: தோல்வி குறித்து டோனி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Toni ,Chennai ,Chennai Super Kings ,Kolkata Knight Riders ,61st league ,Chepakkam ,IPL ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் போட்டியில் இன்று குஜராத் டைடன்ஸ்-சூப்பர் கிங்ஸ் மோதல்