![]()
சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் கைவினை, உணவு திருவிழாவை மே 21 வரை நீட்டித்து சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. சென்னை தீவுத்திடலில் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவுத் திருவிழா என தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஏப்ரல் 28ம் தேதி சென்னை விழா கோலாகலமாக தொடங்கியது. ரூ.1.50 கோடி செலவில் மிக பிரமாண்டமாக இந்த விழா நடத்தப்படுகிறது. 300 விற்பனையாகங்கள் அமைக்கப்பட்டு 25 அரங்குகளில் வித்தியாசமான உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்கள் கலை பொருட்களை 70 அரங்குகளில் காட்சிக்காக வைத்துள்ளனர். இதில் புவியியல் குறியீடு பெற்ற பொருட்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல சில பொருட்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்தும் செய்து காட்டப்படுகிறது. பங்களாதேஷ், பூட்டான், ஈரான், நேபாளம், நைஜீரியா, தென்னாபிரிக்கா, இலங்கை, கிர்கிஸ்தான் உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த கைவினை கலைஞர்கள், தங்கள் சொந்த நாட்டு கைவினை பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்த விழாவில் 20 பாரம்பரிய கலைவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் பங்கேற்று வருகின்றனர். சென்னை விழா தொடங்கியபோது இருந்த வரவேற்பை விட தற்போது அதிக அளவில் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை விழா மே 14 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மே 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் கைவினை, உணவு திருவிழாவை மே 21 வரை நீட்டித்து சுற்றுலாத் துறை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.
