×

சென்னை கொளத்தூர் பகுதியில் ரூ.61 கோடியில் கட்டப்பட்ட மேயர் சிட்டிபாபு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.61.98 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேயர் சிட்டிபாபு மேம்பாலத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: கொளத்தூர் தொகுதியில் வரிசையாக பல திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறேன். அதில் குறிப்பாக, போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க்கக்கூடிய வகையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ.61 கோடியே 98 லட்சம் திட்ட மதிப்பீட்டிலான இந்த மேம்பாலம் மேயர் சிட்டிபாபு அவர்கள் பெயரால் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இது கொளத்தூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதியன்று தெற்கு ரயில்வே பொது மேலாளர்க்கு எல்சி-1 கேட் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு பிறகு தொடர்ச்சியாக, 2015ம் ஆண்டிலும், அது வலியுறுத்தப்பட்டது. மேலும், மேலும் தொடர்ந்து அதை குறிப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், உடனடியாக சென்னை மாநகராட்சியின் அனுமதி அப்போது கிடைக்கவில்லை என்ற பதில் எங்களுக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளரிடமிருந்து வந்தது. எதிர்க்கட்சியாக இருந்த அந்த நேரத்தில் அன்றைய ரயில்வே துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ்பிரபு. அவரிடமும் நேரடியாக சென்று வலியுறுத்தி சொன்னேன். அதற்கு பிறகு ரயில்வே பட்ஜெட்டில் ரூ.7.35 கோடி நிதியை ஒதுக்கி பட்ஜெட்டில் அறிவித்தார்.

ரயில்வே துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து 50 சதவீதம், 50 சதவீதம் இந்த செலவினைப் பகிர்ந்துகொண்டு, மேற்கொள்ளும் இந்த மேம்பாலப் பணிக்கு 2019ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதியன்று அடிக்கல் நாட்டப்பட்டது. பெரம்பூர் மேம்பாலம் வரலாறு எல்லாம் உங்களுக்குத் தெரியும். 10 பாலங்களை கட்டுவதாக முடிவு செய்து, 9 பாலங்களை கட்டி முடித்தோம். தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக பெரம்பூர் மேம்பாலம் மட்டும் கட்டப்படவில்லை.

மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன், எல்லாவற்றையும் கட்டிவிட்டீர்கள், இதை கட்டவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். என்ன தொழில்நுட்ப பிரச்சனைகள் இருந்தாலும் பரவாயில்லை, அது சரி செய்யவேண்டும், சரி செய்ய வேண்டும் என்று சொல்லி, அவரே டெல்லிக்கு பலமுறை சென்று, அங்கிருக்கக்கூடிய அதிகாரிகளிடத்தில் கலந்து பேசி, ஆய்வு நடத்தி, அதற்கு பிறகு ஆட்சி போய் விட்டது. பிறகு அந்த 10-வது பாலம் கட்டுவதில் ஏற்பட்ட சிக்கலை நம்முடைய மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் தான் தீர்த்து வைத்தார்.

முதலமைச்சராக இருந்த கலைஞர்தான் அடிக்கல் நாட்டி வைத்தார். 9 பாலங்களை திறந்து வைத்தார். அந்த பாலத்தில் மட்டும் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்ட காரணத்தினால், காலம் தாழ்ந்து போனது. பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் செய்து முடித்திருக்க வேண்டும், கவலைப்படவில்லை. அதற்கு பிறகு மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்து, யார் அடிக்கல் நாட்டி வைத்தார்களோ, அதே முதலமைச்சர் கலைஞர் அந்த பாலத்தை திறந்து வைத்தார். அதுதான் வரலாறு.அப்போது மேடையில் முதலமைச்சர் கலைஞரிடத்தில், மறைந்த மாறன் தான் இந்த பாலம் வருவதற்கு காரணமாக இருந்தால் என்று நான் சொன்னவுடன், அந்த பாலத்திற்கு கீழே இருக்கக்கூடிய பூங்காவிற்கு முரசொலிமாறன் பூங்கா என்று பெயர் சூட்டினார்.

முரசொலிமாறன் பாலம் வருவதற்கு காரணமாக இருந்தாரோ, அதுமாதிரி, இந்த பாலம் வருவதற்கு காரணமாக இருந்த இன்றைக்கு நான் உயிரோடு, இந்த மேடையில் நின்று பேசுகிற வாய்ப்பு, முதலமைச்சராக இருந்து, மக்களுக்கு ஆற்றுகிற அந்த கடமை, இந்த வாய்ப்பு எல்லாம் எனக்கு இருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் சிட்டி பாபு தான். நான் அதைத்தான் நினைத்துப் பார்த்து உடனே அவர் பெயரை சொன்னேன். இன்றைக்கு அவருடைய பெயரால், மேயர் சி.சிட்டிபாபு என்ற அந்த பெயரில் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் மிசா சிறையில் நான், முரசொலிமாறன், மற்றவர்களெல்லாம் அடைக்கப்பட்டிருந்தபோது எங்களோடு அடைபட்டிருந்தவர் ஓர் ஆண்டு காலம் சிட்டிபாபு.

என் மீது விழ இருந்த அடிகளை அவர் மட்டும் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்காவிட்டால், நான் இல்லை. அந்த நன்றி உணர்வு பெருக்கோடுதான் இந்த பாலத்திற்கு மேயர் சிட்டிபாபு என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது தவிர வேறு அல்ல.
இந்தப் பாலத்தை 10 வருடமாக கஷ்டப்பட்டு கட்டிமுடித்தோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, அப்படிப்பட்ட இப்பாலத்தை இப்போது எப்படி கம்பீரமாக அழகோடு காட்சியளிக்கிறதோ, தொடர்ந்து கடைசி வரையில், மக்கள் அதை நிம்மதியாக பயன்படுத்தக்கூடிய வகையில் இதே அழகோடு, பொலிவோடு இருக்க வேண்டும். அதற்கு இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைக்க வேண்டும் இந்தப் பாலத்தை காலம் கடந்து கட்டப்பட்டிருந்தாலும், ஒரு சினிமாவில் சூப்பர் ஸ்டார் சொல்லுவதைப் போல, லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்-ஆக வந்திருக்கிறது. அதுமாதிரி கொஞ்சம் லேட்டாக இருந்தாலும், லேட்டஸ்ட்-ஆக நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள். அதை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். திராவிட மாடல் அரசு என்றைக்கும் உங்களுக்கு துணை நிற்கும்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா துணை மேயர் மகேஷ்குமார், எம்பிக்கள் கலாநிதி வீராசாமி,கிரிராஜன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றியழகன், வாரிய தலைவர் ரங்கநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மண்டல தலைவர்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், மேயர் சிட்டிபாபு மகன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சென்னை கொளத்தூர் பகுதியில் ரூ.61 கோடியில் கட்டப்பட்ட மேயர் சிட்டிபாபு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Mayor ,Chitibabu ,Kolathur ,Chennai ,Assembly Constituency ,
× RELATED நபிகள் நாயகத்தின் அறிவுரைகளைப்...