×

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி மக்களவை தேர்தல் வெற்றிக்கு முதல் படி; சித்தராமையா பெருமிதம்

மைசூரு: 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முதல்படியாக கர்நாடக தேர்தல் வெற்றி அமைந்துள்ளது என்று சித்தராமையா தெரிவித்தார். கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியதாவது, ‘கர்நாடக மாநில தேர்தல் வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கான முதல்படி. இந்திய நாட்டின் பிரதமராக ராகுல்காந்தி வருவார். கர்நாடக மாநில மக்களின் தீர்ப்பு நரேந்திரமோடிக்கு எதிராகவும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகவும் அமைந்துள்ளது.

இந்த தேர்தல் வாழ்வா, சாவா என்று அமைந்திருந்தது. ஆனால் மக்கள் காங்கிரசுக்கு வெற்றியை கொடுத்து அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்படியாக வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். நாட்டின் பிரதமராக ராகுல்காந்தி வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாஜ அல்லாத கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

பிரதமர் மோடி 20 பொதுகூட்டங்களில் பங்கேற்றார். 6 ரோட்ஷோ நடத்தினார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடக மாநிலத்திலேயே முகாமிட்டு சூறாவளி பிரசாரம், இதே போன்ற பாஜ தேசிய தலைவர் நட்டா, பிற மாநில பாஜ தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் மக்களின் தீர்ப்பு 100 சதவீதம் அவர்களுக்கு எதிராகத்தான் அமைந்துள்ளது. கர்நாடகாவில் மழை வெள்ளம் பாதித்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல பிரதமர் மோடி வரவில்லை. அவ்வளவு ஏன் மாநில தேர்தல் பிரசாரத்துக்காக எந்த பிரதமரும் 20 பேரணியில் கலந்து கொண்டதேயில்லை. மதரீதியான அரசியலை மக்கள் புறக்கணித்துள்ளார்கள். இது மதசார்பின்மை என்ற கட்டமைப்புக்கு மிரட்டல் விடுப்பதாக இருக்கிறது.

கர்நாடக மக்கள் அரசியல் அறிவில் முதிர்ச்சியடைந்தவர்களாக இருக்கிறார்கள். எந்த கட்சி மாநிலத்தை பாதுகாக்கும் என்று அறிந்துள்ளார்கள். வெறுப்பு மற்றும் மத அரசியல் கர்நாடகாவில் நடந்து வந்தது. இதை மக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பணபலத்தை வைத்து பாஜ இந்த தேர்தலில் வெற்றி பெற முயற்சித்தது. ஆனால் அதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. பாஜ ஆட்சியில் மக்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்ததால் ஆட்சியை மாற்ற அவர்கள் முடிவெடுத்துள்ளனர்’ இவ்வாறு அவர் கூறினார்.

The post கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி மக்களவை தேர்தல் வெற்றிக்கு முதல் படி; சித்தராமையா பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Karnataka ,Lok Sabha elections ,Siddaramaiah ,2024 parliamentary elections.… ,Lok Sabha ,Pride ,Dinakaran ,
× RELATED அதிக முறை தேர்வான எம்பிக்குத்தான்...