×

மோடியை நவீன் பட்நாயக் சந்தித்த நிலையில் சபாநாயகர், 2 அமைச்சர்கள் திடீர் ராஜினாமா: ஒடிசா அரசியலில் பரபரப்பு

புவனேஸ்வர்: பிரதமர் மோடியை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சந்தித்த அடுத்த சில நாட்களில் ஒடிசா அமைச்சர்கள் இருவர், சபாநாயகர் ஆகியோர் தங்களது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளனர். ஒடிசா மாநில முதல்வரும், பிஜூ ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக், கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை பூரிக்கு மாற்றுவது தொடர்பாக பேசினேன். என்னை பொறுத்தவரை மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லை. அடுத்தாண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பிஜூ ஜனதா தளம் கூட்டணி வைக்காது, தனித்து போட்டியிடுவோம்’ என்றார். இந்நிலையில், ஒடிசா சட்டசபை சபாநாயகர் பைக்ரன் கேசரி ஆருக்கா, மாநில கல்வி அமைச்சர் காந்தா சாகு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஸ் ஆகியோர் தங்கள் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.

அவர்கள் தங்களது தனிப்பட்ட காரணங்களுக்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முதல்வர் நவீன் பட்நாயக் புதிய அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளார். ராஜினாமா செய்தவர்களுக்கு அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பிஜு ஜனதா தளத்தின் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post மோடியை நவீன் பட்நாயக் சந்தித்த நிலையில் சபாநாயகர், 2 அமைச்சர்கள் திடீர் ராஜினாமா: ஒடிசா அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Speaker ,Modi ,Navin Patnaik ,Odisha ,Bhubaneswar ,Chief Minister ,
× RELATED நெல்லையில் மழையால் சேதமடைந்த...