×

காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ரூ.2.71 கோடிக்கு கொள்முதல்

காரமடை, மே 13: கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டுமென மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஏப்.1ம் தேதி முதல் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை மட்டுமல்லாமல் பொள்ளாச்சி, நெகமம் உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொப்பரை தேங்காய் கொண்டு வரப்படுகிறது.

இங்கு பருப்பு கொப்பரை தேங்காய் ரூ.108.60க்கும், பந்து கொப்பரை தேங்காய் ரூ.118க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஈரப்பதமானி கொண்டு கொப்பரை ஈரப்பதத்தின் அளவு 6க்கும் கீழ் இருந்தால் மட்டுமே கொப்பரை கொள்முதல் நடைபெறுகிறது. இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறுகையில்,“விவசாயிகள் தங்களது பட்டா, சிட்டா அடங்கல் உள்ளிட்டவற்றை கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். தற்போது, கொப்பரை தேங்காய் 108 ரூபாய் 60 பைசாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

ஏப்.1ம் தேதி முதல் இதுவரை 149 விவசாயிகளிடமிருந்து 250 டன் கொப்பரை தேங்காய் ரூ.2 கோடியே 71 லட்சத்து 50 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தங்களுடைய இலக்கான 1000 டன் கொப்பரை தேங்காய் விரைவில் கொள்முதல் செய்யப்படும். மேலும், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மெகா மார்க்கெட் வளாகத்தில் அரசுக்கு சொந்தமான 500 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள குளிர்பதன கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் மஞ்சள், மிளகாய், காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை இருப்பு வைத்துக் கொள்ளலாம். ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளுக்கு இந்த மையம் உதவியாக இருக்கும். எனவே, இந்த மையத்தினை வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

The post காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ரூ.2.71 கோடிக்கு கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Karamada ,Govai ,Karamadah ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை