×

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மா உள்பட 68 பேருக்கு அறிவிக்கப்பட்ட பதவி உயர்வு நிறுத்தி வைப்பு!!

டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மாவின் பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது. ராகுலுக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதித்த குஜராத்தில் கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து மூத்த சிவில் நீதிபதி கேடர் அதிகாரிகளான ரவிக்குமார் மஹேதா மற்றும் சச்சின் பிரதாப் ராய் மேத்தா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக மாநில அரசு மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஆகியோர் பதிலளிக்க ஏப்ரல் 13ம் தேதி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 18ம் தேதி சம்பந்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு குறித்த உத்தரவு வெளியிடப்பட்டது.

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த சூரத் தலைமை ஜூடிசியல் நீதிபதி உட்பட 68 கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்ஆர் ஷா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதவி உயர்வு குறித்த அறிவிப்பை குஜராத் அரசு இவ்வளவு அவசரம் அவசரமாக அறிவித்தது ஏன்? குஜராத் சட்டத் துறை செயலாளர் அவ்வளவு பெரிய ஆளா? நாங்கள் நினைத்தால் யாருடைய வருங்காலத்தையும் அழிக்க முடியும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர். பின்னர் வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”குஜராத்தில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் 68 பேருக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. பதவி உயர்வு பற்றிய வழக்கு விசாரணையில் உள்ள போதே குஜராத் அரசு பதவி உயர்வு அறிவிக்கை வெளியிட்டதற்கு தடை விதிக்கப்படுகிறது. பதவி உயர்வு என்பது தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.பதவி உயர்வு அளிக்கும் குஜராத் உயர்நீதிமன்ற பரிந்துரை மற்றும் அரசின் அறிவிக்கை சட்டவிரோதமானது. ஏற்கனவே இருந்த பதவியிலேயே நீதிபதிகள் தொடர உத்தரவிடப்படுகிறது,” எனத் தெரிவித்துள்ளனர்.

The post அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மா உள்பட 68 பேருக்கு அறிவிக்கப்பட்ட பதவி உயர்வு நிறுத்தி வைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Judge ,H.M. ,Raqul Gandhi ,H. ,Verma ,Delhi ,Rahaul Gandhi ,H.M. H. Verma ,Rakulu ,H.E. H. ,Dinakaran ,
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...