×

அரசு பொருட்காட்சி நாளை துவங்குகிறது

கோவை, மே 12: கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நாளை முதல் துவங்குகிறது. இதனை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கை: செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கோவை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்கும் வகையில் அனைத்து துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும் வகையில் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு நாளை (13ம் தேதி) மாலை 4 மணிக்கு சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் பொருட்காட்சியை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.

இதில், செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர், மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர். இந்த பொருட்காட்சியில், மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை உள்ளிட்ட 27 அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அரசு சார்பு நிறுவனங்கள் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு அம்சங்களும் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10, பள்ளி மூலம் அழைத்து வரப்படும் மாணவ, மாணவிகளுக்கு சலுகை கட்டணமாக ரூ.5 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொழுதுபோக்கு அம்சத்துடன் துவங்கப்பட உள்ள அரசு பொருட்காட்சியில் பொதுமக்கள் கலந்துககொண்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post அரசு பொருட்காட்சி நாளை துவங்குகிறது appeared first on Dinakaran.

Tags : fair ,Coimbatore ,Government Exhibition ,Coimbatore Central Jail Grounds ,Dinakaran ,
× RELATED உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே 10-ம்...