×

எங்கும் தீக்கரை, துப்பாக்கிச் சூடு, கல்வீச்சு.. பற்றி எரியும் பாகிஸ்தான் : வன்முறையில் ஈடுபடுவோர் இரும்பு கரம் கொண்டு அகற்றப்படுவர் என பிரதமர் கண்டனம்!!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இம்ரான்கான் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், வன்முறையில் ஈடுபடுவோர் இரும்பு கரம் கொண்டு அகற்றப்படுவர் என்று அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஏ கட்சி தலைவருமான இம்ரான் கான் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றம் சென்ற போது பாதுகாப்புப் படையினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில் இம்ரான் கான் கைதை கண்டித்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் 2ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்நாட்டின் ரேடியோ நிலை அலுவலகம் உட்பட பல அலுவலகங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இஸ்லாமாபாத், கராச்சி உள்ளிட்ட பல இடங்களில் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் கல்வீசி தாக்கிக் கொண்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டி அடித்ததால் திரும்பிய திசை எல்லாம் கலவரக் காடாக காட்சி அளிக்கிறது. இதனிடையே இம்ரான் கைது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ், இம்ரான் ஆதரவாளர்களின் செயல்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார்.

இம்ரான் கான் மீதான குற்றச் ஷாட்டுக்கு அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக கூறிய அவர், பிடிஏ கட்சியினர் வன்முறையில் ஈடுபடுவது தீவிரவாத செயல் என்று சாடினார். இம்ரான் கான் ஆட்சி காலத்தில் தமது சகோதரர் நவாஸ் ஷெரீப் பொய்யான குற்றச் சாட்டில் கைது செய்த போது, தங்கள் தரப்பினர் வன்முறையில் ஈடுபடாமல் நீதிமன்றத்தை நாடி குற்றமற்றவர்கள் என்று நிரூபித்ததாக ஷாபாஸ் கூறியுள்ளார். மேலும் போராட்டக்காரர்கள் மக்களை சாலைகளில் பிடித்து வைத்து அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும் ஆம்புலன்ஸ்களில் இருந்து நோயாளிகளை இறக்கிவிட்டு வாகனத்திற்கு தீ வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே வன்முறையை ஒடுக்க பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணீர் புகைக்குண்டு வீசியும் தடியடியும் நடத்தி அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதனிடையே ஷாபாஸ் ஷெரீபின் உரையால் ஆவேசம் அடைந்த இம்ரான்கான் ஆதரவாளர்கள் பிரதமரின் இல்லத்தை முற்றுகையிட்டு இரவில் போராடியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post எங்கும் தீக்கரை, துப்பாக்கிச் சூடு, கல்வீச்சு.. பற்றி எரியும் பாகிஸ்தான் : வன்முறையில் ஈடுபடுவோர் இரும்பு கரம் கொண்டு அகற்றப்படுவர் என பிரதமர் கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : Islamabad ,Imrankan ,Pakistan ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா