×

₹6.37 கோடியில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடம்

தர்மபுரி, மே 11: தர்மபுரி மாவட்டத்தில் ₹6.37கோடி மதிப்பீட்டில் கடத்தூர், ஏரியூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டத்தில், ஒரு நகராட்சி, 8 ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள், 251 கிராம ஊராட்சிகள் இருந்தன. அதாவது, தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 8 ஒன்றியங்கள் இருந்தன. 4 ஆண்டுகளுக்கு முன், நிர்வாக வசதிக்காக மொரப்பூர் ஒன்றியத்தில் இருந்து கடத்தூர் ஒன்றியமும், பென்னாகரம் ஒன்றியத்தில் இருந்து ஏரியூர் ஒன்றியமும் புதியதாக உருவாக்கப்பட்டது. கடத்தூர் ஒன்றிய அலுவலகம் ஒடல்சல்பட்டியில் சமுதாய கூடத்திலும், ஏரியூர் ஒன்றிய அலுவலகம் வாடகை கட்டிடத்திலும் இயங்கி வந்தன. இந்நிலையில் கடத்தூர், ஏரியூர் ஒன்றிய அலுவலகத்திற்கு தனித்தனியாக அரசு கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்று நிதி ஒதுக்கீடு செய்தது. ஏரியூர் ஒன்றிய அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு ₹3.27 கோடியும், கடத்தூர் ஒன்றிய அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு ₹3.10 கோடியும் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. கடத்தூர், ஏரியூர் ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிடத்திற்கு மொத்தம் ₹6.37 கோடி மதிப்பீட்டில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டிடம் கட்டும்பணிகள் நடந்தது. தரைதளத்துடன் 2 மாடி வசதி கொண்டதாகும். இந்நிலையில் கட்டிட கட்டுமானப்பணிகள் முடிந்து, நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கடத்தூர், ஏரியூர் ஒன்றிய அலுவலகத்தை காணொலி காட்சியின் மூலமாக திறந்து வைத்தார். கடத்தூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில், மாவட்ட கலெக்டர் சாந்தி குத்துவிளக்கேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம்ரெஜினா, கடத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா, துணைத்தலைவர் சக்திவேல், கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா, ரவிச்சந்திரன் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஏரியூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில், பென்னாகரம் தொகுதி பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி மற்றும் அதிகாரிகள் குத்துவிளக்கேற்றி வைத்து, இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில், ஏரியூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிசாமி, துணை தலைவர் தனபால், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வராஜ், பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, ரேணுகா மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்திற்கு ₹3.27 கோடியும், கடத்தூர் ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்திற்கு ₹3.10 கோடியும் அரசு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப்பணிகள் நடந்தது. அதாவது, கடத்தூர், ஏரியூர் ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிடத்திற்கு மொத்தம் ₹6.37 கோடியில் கட்டுமானப்பணிகள் நடந்து முடிந்தது. தற்போது தமிழக முதல்வர் காணொலி காட்சியின் வாயிலாக கடத்தூர், ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இனி சொந்த கட்டிடத்தில் கடத்தூர், ஏரியூர் ஒன்றிய அலுவலகங்கள் இயங்கும் என்றனர்.

The post ₹6.37 கோடியில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : New Panchayat Union ,Dharmapuri ,panchayat union ,Kaduur, Ariyur ,Dharmapuri district, Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்