×

(வேலூர்) பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கிய வேலங்காடு ஏரி லட்சக்கணக்கில் திரண்டு குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர் டிராக்டர்கள், லாரிகளில் வந்து குவிந்த பக்தர்கள் பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரி திருவிழா கோலாகலம்

அணைக்கட்டு, மே 11: பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரி திருவிழாவில் வேலங்காடு ஏரி பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பொற்கொடியம்மன் ஊர் கோயில் உள்ளது. இக்கோயில் பொற்கொடியம்மன் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன்கிழமை அன்று தாய் வீடான வேலங்காடு சித்தேரியில் அமைந்துள்ள பொற்கொடியம்மன் ஏரி கோயிலுக்கு புஷ்ப ரத தேரில் வரும் வைபவம் புஷ்பரத ஏரி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி சித்திரை கடைசி புதன்கிழமையான நேற்று புஷ்பரத ஏரி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. இந்த திருவிழாவை அறநிலையத்துறையினருடன் இணைந்து ஆண்டுதோறும் வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு உள்ளிட்ட 4 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மிகுந்த பக்தியுடன் நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான இந்த ஏரிதிருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு ஏரியில் உள்ள பொற்கொடியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பொற்கொடியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வல்லண்டராமம் கிராமத்தில் உள்ள ஊர்கோயில் பொற்கொடியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனைகள் செய்யப்பட்டது. வேலூர், அணைக்கட்டு, ஊசூர், பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர், பென்னாத்தூர், கணியம்பாடி, குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் விதமாக மாட்டு வண்டிகள், டிராக்டர்கள், மினி வேன்கள், லாரிகளில் பச்சை ஓலை, வேப்பிலைகட்டிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு முதலிலே வேலங்காடு ஏரியில் குவிந்தனர்.

தொடர்ந்து நேற்று காலை முதல் கோயில் அருகே ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான புஷ்பரத தேரோட்டம் மாலையில் நடந்தது. இதற்காக கடந்த சில நாட்களாக காப்பு கட்டி விரதம் இருந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட புஷ்பரத தேரை 2 கிலோமீட்டர் தூரம் தோள் மீது சுமந்தபடி அன்னாசிபாளையம் கிராமத்தில் இருந்து வேலங்காடு ஏரி பாதி தூரம் தூக்கி வந்தனர். 4 மணிக்கு மேலாகியும் புஷ்பரத தேர் ஏரி கோயிலுக்கு வராததால் புஷ்ப ரத தேர் அடுத்த கிராமத்திற்குச் செல்லும் வேலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏரியில் பாதி வழியில் இருந்து புஷ்பரத தேரை டிராக்டரில் எடுத்து வந்து கோயில் அருகே நிலை நிறுத்தினர். அங்கு நீண்ட நேரம் காத்திருந்த உள்ளூர், வெளியூர் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நிலை நிறுத்தப்பட்ட தேரை சுற்றி வந்தும், அம்மனுக்கு கற்பூரம் ஏற்றி ஆர்த்தி எடுத்தும் வழிபட்டனர்.

மேலும் பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு ஆகியவற்றை தூவியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் அவர்கள் வளர்த்த கோழிகளை கோயில் மேல் விட்டும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பொதுமக்கள் அவர்கள் வீட்டில் வளர்க்கும் மாடுகளை பிடித்து வந்து கோயிலை வலம் வந்தும் வழிபட்டனர். வழக்கமாக புஷ்பரத தேர் ஏரிக்கு மதியம் 1 மணி அல்லது 2 மணியளவில் எடுத்து வரப்படும். ஆனால் இந்த முறை மாலை 5 மணிக்கு ஏரி கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது. 3 மணி நேரத்திற்கு மேல் ஆனதால் காத்திருந்த பக்தர்கள் சிரமப்பட்டனர். மேலும் அன்னாசிபாளையம் கிராமத்தில் இருந்து வேலங்காடு ஏரி கோயில் வரை புஷ்பரத தேரை பக்தர்கள் தோல் மீது சுமந்தபடி எடுத்து வருவது வழக்கம்.
ஆனால் வரலாற்றில் முதல் முறையாக நேற்று புஷ்பரத தேர் ஏரியில் பாதி தூரம் தூக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து டிராக்டரில் எரி கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆர்டிஓ கவிதா, எம்எல்ஏ நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், தாசில்தார் வேண்டா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராபென்காந்தி, ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், துணைத் தலைவர் சித்ராகுமாரபாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அசோகன், அறங்காவல் குழு உறுப்பினர்கள் அருணாச்சலம், சுகுமார், தேவி, மகேந்திரன், பிடிஓக்கள் சுதாகரன், சாந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் சிவஞானம், மகாலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சைனலதாமணி, செந்தில்குமார், துணைத் தலைவர் ப்ரீத்திவெங்கடேசன், ஆர்.ஐ ரேவதி, விஏஓ ரேணுஉள்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏரி திருவிழாவை முன்னிட்டு வேலூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு வழிநெடுகிலும் ஆங்காங்கே பச்சை ஓலை பந்தல் அமைத்து நீர், மோர், பானம், கூழ், அன்னதானங்கள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன் மற்றும் அணைக்கட்டு போலீசார் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் லட்சுமணன், துணை ஆணையரும் சரிபார்ப்பு அலுவலருமான ரமணி, பொற்கொடியம்மன் கோயில் செயல் அலுவலர் அண்ணாமலை, ஆய்வாளர் சுரேஷ்குமார், தக்கார் உதவி ஆணையர் நித்யா, கோயில் எழுத்தர்கள் ஆறுமுகம், ஆனந்தன், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் 4 கிராமம் மேட்டுக்குடிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

தொடர்ந்து நேற்று மாலை வேலங்காடு கிராமத்தில் புஷ்பரத தேர் வீதி உலாவும், அங்கே இரவு தங்குதலும் நடந்தது. இதையடுத்து இன்று பனங்காடு கிராமத்தில் புஷ்ப ரதம் வீதி உலாவும், அந்தித்தேர் வீதி உலாவும், குதிரை வாகனம் ஆரோகனத்தில் அம்மன் அன்னாசிபாளையத்தில் இரவு தங்குதலும் நடக்கிறது. பின்னர் நாளை காலை வேலங்காடு கிராமத்தில் வீதி உலாவும், மாலை பனங்காடு கிராமத்தில் வீதி உலாவும் அங்கு இரவு தங்குதலும் நடக்கிறது. நாளை மறுநாள் காலை வல்லாண்டராமம் கிராமத்தில் வீதி உலாவும், காப்பு கவிழ்த்தலும் நடக்கிறது. விழாவில்பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு விழாக்கு விழாவில் காயம் அடைந்த, மயக்கம் அடைந்த பக்தர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. நேற்று வெயில் அதிக அளவில் இருந்தது இதையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் எரிக்கு வந்து பொற்கொடியம்மனை தரிசித்து சென்றனர்.

The post (வேலூர்) பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கிய வேலங்காடு ஏரி லட்சக்கணக்கில் திரண்டு குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர் டிராக்டர்கள், லாரிகளில் வந்து குவிந்த பக்தர்கள் பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரி திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Velur ,Velangadu lake ,Porkodiyamman Pushparatha lake festival ,Ammakadu ,
× RELATED (வேலூர்) வனப்பகுதிகளில் உள்ள...