×

உணவு தயாரிக்க, பரிமாற சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தேர்வு காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளுக்கு விரிவாக்கம்

நெல்லை, மே 10: தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு திட்டம் கிராம ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதால், இத்திட்டத்தில் உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுதல் பணிக்கு சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முதல்வரால், ஆரோக்கியமான வருங்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, முதல்வரின் காலை உணவுத் திட்டம் நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில், பள்ளி சமையலறை மையங்களை நிர்வகிப்பதுடன், குழந்தைகளுக்கு காலை உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் பணிக்கு முற்றிலும் தற்காலிகமாக கீழ்க்காணும் தகுதியுடைய சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இப்பணிக்கு, தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவமுள்ள சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சுய உதவிக்குழு உறுப்பினர் அதே கிராம ஊராட்சியில், நகர்ப்புற பகுதியில் வசிப்பிடமாகக் கொண்டு வசிப்பவராக இருக்க வேண்டும்.

காலை உணவை சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் போதுமான அடிப்படை திறன் பெற்றிருக்க வேண்டும். சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிப்பவர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள் 5ம் வகுப்பை நிறைவு செய்யும் பட்சத்திலோ அல்லது அப்பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றலாகும் பட்சத்தில் அவர் விடுவிக்கப்பட்டு வேறு உறுப்பினர் இப்பணியில் அமர்த்தப்படுவார். சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மகளிர் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய ‘ஆன்ட்ராய்டு மொபைல் போன்’வைத்திருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிகளிலும் அமைக்கப்பட்டுள்ள முதன்மை குழுவால் தேர்வு தற்காலிக பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

யாரையும் நம்பி ஏமாறாதீர்…
இதனிடையே கலெக்டர் கார்த்திகேயன் மேலும் கூறுகையில் ‘‘தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுதல் பணிக்காக யாரும் பொய்யான வாக்குறுதிகள் வழங்கினாலோ, பணம் கேட்டாலோ, அதை நம்பி ஏமாறாமல் விழிப்புடன் இருக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இப்பணி குறித்து யாரேனும் தவறான வாக்குறுதிகள் அளித்தாலோ, பணம் ஏதும் கேட்டாலோ 9786566111 என்ற எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் (10 மணி முதல் 5 மணி வரை) புகார் அளிக்கலாம்’’ என்றார்.

The post உணவு தயாரிக்க, பரிமாற சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தேர்வு காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளுக்கு விரிவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Nellau ,Nadu ,Grama Navrakshi ,Bharadraksha ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...