×

தாம்பரம் மாநகராட்சிக்கான புதிய கட்டிடம் அமையவுள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு தமிழகத்தின் 20வது மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. மேலும் தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி பட்டியலின பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டது. மாநகராட்சியின் 70 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 54 இடங்களில் வெற்றி பெற்று தாம்பரம் மாநகராட்சியை கைப்பற்றியது. தாம்பரம் மாநகராட்சி மேயராக வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயராக கோ.காமராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதேபோல் மண்டலகுழு தலைவர்களாக வே.கருணாநிதி, இ.ஜோசப் அண்ணாதுரை, ஜெயபிரதீப், டி.காமராஜ், எஸ்.இந்திரன், நியமன குழு உறுப்பினராக பெருங்களத்தூர் சேகர், கணக்கு குழு தலைவராக மதினா பேகம், பொது சுகாதார குழு தலைவராக நரேஷ் கண்ணா, கல்விக் குழு தலைவராக கற்பகம் சுரேஷ், வரிவிதிப்பு மற்றும் நிதி குழு தலைவராக ரமணி ஆதிமூலம், நகரமைப்பு குழு தலைவராக நடராஜன், பணிகள் குழு தலைவராக சுந்தரி ஜெயக்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தாம்பரம் மாநகராட்சிக்கு கட்டடம் இல்லை. எனவே தாம்பரம் நகராட்சியாக இருந்தபோது மேற்கு தாம்பரம், முத்துரங்கமுதலி தெருவில் நகராட்சி அலுவலகமாக செயல்பட்டு வந்த அலுவலகம் தற்போது மாநகராட்சி அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

ஆனால் இந்த அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு போதுமான அறைகள் இல்லாததாலும், மாமன்ற கூட்டம் நடைபெறும் அறை சிறிய அளவில் உள்ளதாலும், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் காத்திருக்க போதுமான இடம் மற்றும் கழிவறை வசதிகள் இல்லாததாலும் அலுவலகத்திற்கு வரும் அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே தாம்பரம் மாநகராட்சிக்கு அனைத்து வசதிகளும் கொண்ட புதிய அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என தொடர்ந்து பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி அலுவலக கட்டிடத்திற்கு இடம் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றது.

அப்போது தாம்பரம், சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் தேசிய சித்த மருத்துவமனை அருகே மாநில சுகாதாரத்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் மாவட்ட அரசு மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டிருந்ததால், அந்த இடத்தை சுகாதாரத்துறை தர மறுத்துவிட்டது. இதனையடுத்து தாம்பரம், சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு நெஞ்சகநோய் மருத்துவமனை வளாகத்தில் வெளிநோயாளிகள் பிரிவு இயங்கிய இடத்தில் நான்கரை ஏக்கர் நிலம் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டு, அங்கு தாம்பரம் மாநகராட்சி அலுவலக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்த ஆவணங்கள் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த இடம் தாம்பரம் மாநகராட்சிக்கு என ஒதுக்கப்பட்டதையடுத்து நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது மாநகராட்சி கட்டிடம் தொடர்பாக வடிவமைக்கப்பட்டுள்ள 3 வரை படங்களை பார்வையிட்ட அதிகாரிகள், அதில் சில மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினர். அந்த 3 வரைபடத்தில் ஒரு வரைபடம் இறுதி செய்யப்பட்ட பின்னர், ரூ.10 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு புதிய மாநகராட்சி கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த ஆய்வின்போது தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா உட்பட பலர் இருந்தனர்.

The post தாம்பரம் மாநகராட்சிக்கான புதிய கட்டிடம் அமையவுள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Pallavaram ,Anakaputtur ,Pammel ,Sembakkam ,Perungalathur ,Birkankaranai ,Madambakkam ,Chitlapakkam ,Tiruneermalai ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...