×

இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கைது: துணை ராணுவம் அதிரடி நடவடிக்கை; நாடு முழுவதும் வன்முறை வெடித்தது

இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை துணை ராணுவ ரேஞ்சர்கள் தடாலடியாக கைது செய்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்ரான் கைதை கண்டித்து அவரது கட்சியினர் பல இடங்களிலும் போராட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவருமான இம்ரான் கான், கடந்த ஆண்டு ஏப்ரலில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, முன்கூட்டியே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு பொதுக்கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு நவம்பரில் கண்டன பேரணியின் போது துப்பாக்கி சூட்டில் உயிர் பிழைத்தார். இதனால் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு மிகவும் நெருக்கடி தரும் இம்ரான் மீது பல்வேறு ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சமீபகாலமாக இம்ரான் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அடிக்கடி கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இம்ரான் கான் நேற்று காலை லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு வந்தார். இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு அவர் வந்த சிறிது நேரத்தில், துணை ராணுவப்படை ரேஞ்சர்கள் ஏராளமானோர் அதிரடியாக நீதிமன்றத்தில் நுழைந்தனர்.

அங்கு கடும் கெடுபிடிகளுடன் இம்ரான் கானை அவர்கள் கைது செய்து வாகனத்தில் ஏற்றி ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர். உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் துணை ராணுவ ரேஞ்சர்கள், இம்ரானின் சட்டை காலரை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 2019ம் ஆண்டு அல்காதிர் பல்கலைக்கழகத்தை அமைப்பது தொடர்பான அல் காதிர் அறக்கட்டளையின் ஊழல் வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொறுப்புகூறல் அமைப்பும் (என்ஏபி), இஸ்லாமாபாத் போலீசாரும் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் உயர் அதிகாரி ஒருவர் தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டுவதாக இம்ரான் கூறியிருந்த நிலையில், அடிப்படை ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாது என ராணுவம் பதிலளித்த அடுத்த நாளே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ராவல்பிண்டியில் உள்ள என்ஏபி அலுவலகத்திற்கு கான் அழைத்து செல்லப்பட்டு, அங்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பிடிஐ தலைவர் பவத் சவுத்ரி அளித்த பேட்டியில், ‘‘இம்ரான் கான் சித்ரவதை செய்யப்படுகிறார். அவரை சிறையிலேயே வைத்து கொலை செய்ய சதி நடக்கிறது. இது பாசிச நாடு’’ என்றார். இம்ரான் கைதால் ஆத்திரமடைந்த அவரது கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களில் குதித்தனர். கராச்சி, லாகூர் உள்ளிட்ட பல நகரங்களிலும் சாலைகளில் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. போலீஸ் வாகனங்களை கட்சியினர் எரித்ததால் வன்முறை ஏற்பட்டது. ராணுவ அதிகாரிகளின் வீடுகளையும் குறிவைத்து பிடிஐ கட்சியினர் தாக்குதல் நடத்தினர். ராவல்பிண்டி உள்ளிட்ட ராணுவ தலைமை அலுவலகங்களிலும் புகுந்து பொருட்களை சூறையாடினர். இதன் காரணமாக பாகிஸ்தானில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கைதான இம்ரான் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கைது: துணை ராணுவம் அதிரடி நடவடிக்கை; நாடு முழுவதும் வன்முறை வெடித்தது appeared first on Dinakaran.

Tags : bak ,islamabad court ,Imran ,Islamabad ,Imran Khan ,
× RELATED வன்முறை குறித்த 2 வழக்குகளில் இம்ரான் கான் விடுவிப்பு