×

ஸ்பைசி டேஸ்ட்டி குழம்புக் கடை

7 வகை தொக்கு… 20 வகை ரெசிபி…!

ஒரு முழுச் சாப்பாட்டில் சுண்டி இழுக்கும் சுவையில் சோறு, கூட்டு, பொரியல் என ஒவ்வொன்றும் தூக்கலாய் இருந்தாலும் குழம்புதான் அத்தனைக்கும் அடிப்படை ருசியூக்கி. இந்தக் குழம்புக்கு என்றே தனிக்கடை ஒன்று சென்னை அசோக் நகரில் அதிரிபுதிரி ஹிட் அடித்திருக்கிறது.சென்னை போன்ற பெரும் நகரங்களில் கணவன் மனைவி என இருவரும் வேலைக்குச் செல்வார்கள். அவர்களுக்காக ஸ்பெஷலி மேட்தான் அசோக் நகரில் இருக்கும் இந்த சி.எஸ்.கே குழம்புக்கடை’. ‘வீட்டில் சோறு மட்டும் வடித்துவிட்டு இங்கு வந்து விதவிதமான குழம்புகளை வாங்கிச் செல்லலாம். சாப்பாட்டிற்கு மட்டுமில்லை தோசை, சப்பாத்தி, பரோட்டா, நானுக்கும் இவை நச்சென்று இருக்கும்’ என்கிறார் கடை உரிமையாளர் விக்னேஷ்.“தூத்துக்குடியில் இருந்து எம்.இ படிப்பதற்காக சென்னை வந்தேன். இப்போ பக்கா சென்னைக்காரனாவே மாறிட்டேன். உணவகத்துறையில் ஆர்வம் அதிகம். அதனாலேயே இந்த குழம்பு கடையை நடத்தி வருகிறேன். நான் தீவிர சாப்பாட்டு பிரியன்.

எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரின் சிறப்பு உணவுகளை தேடிபிடித்து சாப்பிடுவேன். என்னைப்போல பேச்சுலர் பலர் சென்னையில் தங்கி வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையிலும் வேலைக்குச் செல்லும் பலருக்கும் உதவும் வகையிலும் தொடங்கப்பட்டது தான் இந்த குழம்புக் கடை. சாப்பிடக் கொடுக்கிறத ஆரோக்கியமாக கொடுக்கணும். அதனாலதான், செக்கில் ஆட்டின எண்ணெைய பயன்படுத்துறேன். சமையல பத்தி தெரிஞ்சாதான் அத சுவையாகவும் கொடுக்க முடியும், அதனால எம்.இ முடிச்ச பிறகு தனியா ‘புட் சைன்ஸ் கோர்சும் படிச்சு சமையல பத்தி முழுமையா தெரிஞ்சுகிட்டேன். இப்போது கடையில மூன்று வேளையுமே குழம்பு, தொக்கு வகைகள் கொடுத்துட்டு வரோம். எங்க கடையில் பெண்கள் தான் மாஸ்டர்ஸ்.” என்கிறார். சினிமா பிரபலங்கள் முதல் பேச்சிலர்கள், ஃபேமிலிமேன்கள் எனப் பலரும் இங்கு குவிகிறார்கள். தொக்கு வகைகள் தான் இவர்களின் சிறப்பே. மட்டன் தொக்கு சிக்கன் தொக்கு, மொச்சைக்கொட்டை தொக்கு, கருவாட்டுத்தொக்கு, மட்டன் ஃப்ரை, என டிபிக்கல் வீட்டுச்சாப்பாட்டு ஸ்டைல் உணவுகள்தான் இவர்களின் ஸ்பெஷல்.

கூடவே மீன் குழம்பு, ரசம் கருவாட்டுக் குழம்பு என பல விதமான குழம்புகள், சாம்பார், வகைகளும் விற்பனை செய்கின்றார்கள். இருபது ரூபாயில் துவங்கி 200 ரூபாய் வரையில் குழம்பு தொக்கு என 7 வகையான சைவக் குழம்புகள், 20 வகையான அசைவ வகைகள் கிடைக்கின்றன. கூட்டு பொரியல், பச்சடி, தினமொரு கீரை வகை கட்டாயம் உண்டு. ஞாயிற்றுக் கிழமைகளில் 1000 ரூபாய்க்கு ஐந்து பேர் சாப்பிடும் காம்போ உணவு தருகிறார். அதில் அனைத்து வகையான அசைவமும் அடங்கி இருக்கிறது. தொக்கு வகைகள், குழம்பு வகைகள், கூட்டு பொரியல் என தனித்த செய்முறையில் அசத்துகிறார்கள்.“சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் ரொம்ப புடிக்கும். தோனி வெறியன்னே சொல்லலாம். அதனால தான் இந்த பேரு கடைக்கு வச்சேன். கூடவே எங்க அப்பா அம்மா பேரும் இந்த எழுத்துல துவங்கிது. முழுமையாக வீட்டு முறைப்படித்தான் சமைக்கிறோம். சுத்தமான செக்கில் ஆட்டிய எண்ணெய் அரைத்த மசாலா என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துச் சமைப்பதால்தான் இந்த ருசியும் கைப்பக்குவமும் கிடைக்குது’ என்கிறார் விக்னேஷ்.

– திலீபன், விவேக்
படங்கள் : தமிழ்வாணன்

நெத்திலி கருவாட்டு தொக்கு

தேவை

நெத்திலி கருவாடு – 250 கிராம்
நறுக்கிய சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 4
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 10 பல்
மிளகாய் தூள் – 2 சிட்டிகை
மஞ்சள் தூள் – கால் சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – தாளிக்க
கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை:

கருவாட்டை சுடு தண்ணீரில் நன்றாக சுத்தம் அலசி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தனியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து குறைவான சூட்டில் வதக்கவும். பின்பு அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளியை சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இறுதியில் கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் வரை பிரட்டி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சுவை பார்த்து இறக்கினால், ருசியான நெத்திலி கருவாட்டு தொக்கு தயார்.

The post ஸ்பைசி டேஸ்ட்டி குழம்புக் கடை appeared first on Dinakaran.

Tags : Splicy Tasty Emulsion Shop ,Splice Tasty Emulsion Shop ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…