×

7 நாட்கள் ஊர்வலத்திற்கு பிறகு அழகர் மலைக்கு திரும்பிய கள்ளழகர் : 250 கிலோ வண்ண மலர்கள் தூவி வரவேற்பு!!

மதுரை: 7 நாட்கள் ஊர்வலத்திற்கு பிறகு அழகர் மலைக்கு திரும்பிய கள்ளழகரை 250 கிலோ வண்ண மலர்களை தூவி பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். புகழ்பெற்ற மதுரை அழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அழகர் மலையில் இருந்து கடந்த 3ம் தேதி சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பட்டார். தொடர்ந்து சித்திரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மே 6 ல் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். மே 7ல் திவான் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது. 8ம் நாள் நிகழ்ச்சியில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. கருப்பண்ணசாமி கோயில் முன்பு பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில், கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலை நோக்கி புறப்பட்டார்.

7 நாட்களுக்கு பிறகு அழகர் மலைக்கு திரும்பிய கள்ளழகரை 250 கிலோ வண்ண மலர்களை தூவியும் 21 திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்தும் பக்தர்கள் வரவேற்றனர். நாளை நடைபெறும் உற்சவர் சாந்தி நிகழ்ச்சியோடு 10 நாட்கள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. கள்ளழகர் ஊர்வலம் சென்ற 7 நாட்களும் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. புகழ்பெற்ற இந்த மதுரை சித்திரை திருவிழாவில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

The post 7 நாட்கள் ஊர்வலத்திற்கு பிறகு அழகர் மலைக்கு திரும்பிய கள்ளழகர் : 250 கிலோ வண்ண மலர்கள் தூவி வரவேற்பு!! appeared first on Dinakaran.

Tags : Kallagar ,Alagar hill ,Madurai ,Kallazhagarai ,
× RELATED மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சோதனை...