×

சிலுவையின் பன்முகப் பரிமாணம்

(1 கொரிந்தியர் 1: 20-25)

சிலுவையின் பன்முகம்

* கிறிஸ்துவின் வாழ்க்கைக்கு முழு பொருள் தருவது சிலுவை தான்.
* கிறிஸ்தவத்தின் சாரம் எது என்றால் அது சிலுவைதான்.
* சிலுவை ஒவ்வொரு முறையும் புதிய பரிமாணத்தில் நமக்கு காட்சியளிக்கிறது.
* கிறிஸ்தவம் ஒரு புத்தகம் என்றால் அதன் எல்லாப் பக்கங்களில் சிலுவையின் நிழல் இருக்கும்.
* சிலுவை ஒரு கடந்த காலம். (வரலாறு) சிலுவை ஒரு நிகழ்
காலம். (அனுபவம்) சிலுவை ஒரு எதிர்காலம். (புதிய மானிடம்).

சிலுவை மொழிகள்

* சிலுவை, கடவுளின் எல்லையற்ற மன்னிப்பை வெளிப்படுத்துகிறது.
* சிலுவை, கடவுளின் நிபந்தனையற்ற, அவரது கிருபையால் வரும் மீட்பை நினைவூட்டுகிறது.
* சிலுவை, கடவுள் மனிதரிடையே உருவாக்கும் புரட்சிகர உறவை உணரச் செய்கிறது.
* சிலுவை, கடவுளின் கைவிடப்பட்ட நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
* சிலுவை, கடவுள் நீதியின் மீது அவருக்கிருக்கும் தீராத தாகத்தைக் காட்டுகிறது.
* சிலுவை, கடவுள் தமது செயல்திட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள உறுதியைக் காட்டுகிறது.
* சிலுவை, கடவுளுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத உறவை நமக்குக் காட்டுகிறது.

சிலுவை யூதருக்குத் தடைக்கல்

யூத சமய நம்பிக்கையின்படி மரத்தில் தொங்கவிடப்பட்டவன் சபிக்கப்பட்டவன் (இணைச்சட்டம் 21:23). சமயத் தலைவர்களின் தூண்டுதலால் ரோம அதிகாரம் அவரை அரசியல் குற்றவாளியாகத் தீர்ப்பளித்து சிலுவை தண்டனை வழங்கிக் கொன்றது. சாபத்திற்கு அடையாளமான சிலுவையை இயேசுவின் சீடர்களும் இயேசுவை தமது இரட்சகராக ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களும் நம்பிக்கையின் சின்னமாகவும் பக்தியின் சின்னமாகவும் மற்றும் புனிதச் சின்னமாகவும் மாற்றிவிட்டனர்.

யூதசமயத் தலைவர்களுக்கும் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளாத மற்ற யூதர்களுக்கும் சிலுவை இப்போது தலைவலியாக எரிச்சலூட்டுவதாக மாறிவிட்டது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை குறித்தும் அவருடைய உயிர்த்தெழுதல் குறித்தும் பேசுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யூத சமயத் தலைவர்களுக்கு இல்லாமல் போனது. எந்த அச்சுறுத்தலுக்கும் தண்டனைக்கும் ஆதிக் கிறிஸ்தவர்கள் அஞ்சவில்லை. இயேசுவே ஆண்டவர் என்று தொடர்ந்து அறிவித்து வந்தனர். (திருத்தூதுவர் பணிகள் 4:10-12).

சிலுவை வேறு இனத்தவருக்கு மடமை.

இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கு முன்பே வேற்று இனத்தவரிடையே சிறந்த சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள் தோன்றி மானிடம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் உயரிய தத்துவங்களையும் தர்க்க நியாயங்களையும் எடுத்துக் கூறி வந்தனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு கொலை ஆயுதத்தை ஒரு கூட்டம் கொண்டாடுவது மடமையாகத் தோன்றியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆனால், ஆதிக் கிறிஸ்தவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்தனர்.

சிலுவை அழைக்கப்பட்டவர்களுக்கு கடவுளின் ஆற்றல்

சிலுவை இயேசு கிறிஸ்துவினால் உயர்த்தப்பட்டது. பெருமையடைந்தது. சிலுவையில் இயேசு கிறிஸ்து ஆற்றலின்மையின் ஆற்றலாக விளங்கினார். (Power of the powerlessness). சிலுவை ஒரு அனுபவம். அது கடவுளுக்காக வாழ்தல், கடவுளின் மக்களாகிய ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைக்காகக் குரல் கொடுத்தல்; அவர்களை அடிமைப்படுத்தும் சட்டங்கள் மரபுகளை மீறுதல்; போலி சமயத் தலைவர்கள் அநீதியான ரோம அதிகாரம் முதலியவற்றை எதிர்த்ததால் கிடைத்த அனுபவம்தான் சிலுவை. கடவுளுக்கு மட்டுமே கீழ்ப்படிவது எனும் புரிதலால் கிடைத்த அனுபவமே சிலுவை. இயேசுவின் சிலுவை ஒரு பேராற்றல். அது ஆற்றலிழந்து நிற்கும் அனைவரையும் ஆற்றல்படுத்துகிறது.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post சிலுவையின் பன்முகப் பரிமாணம் appeared first on Dinakaran.

Tags : Christ ,
× RELATED கிறிஸ்தவம் காட்டும் பாதை: கொடுத்து வாங்கு… மகிழ்ந்திரு…