×

விங்ஸ் டு பிளை திட்டத்தில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 9 பேர் நாளை துபாய் பயணம்

சென்னை: சென்னை மாநகராட்சி, கல்வித்துறையானது ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் கிழக்கு, விங்ஸ் டு பிளை அமைப்பின் வாயிலாக கடந்த 7 வருடங்களாக 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் சென்னை பள்ளி மாணவ/ மாணவியருக்கு பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியரை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்து சென்று வருகின்றனர். இதில் 2016ம் ஆண்டு மலேசியாவிற்கும், 2017ம் ஆண்டு ஜெர்மனிக்கும், 2018ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாசாவிற்கும், 2019ம் ஆண்டு சிங்கப்பூருக்கும், 2022ம் ஆண்டு லண்டன் நகருக்கும் கல்விச்சுற்றுலா சென்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2020 மற்றும் 2021ம் ஆண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடு அழைத்து செல்ல இயலாத காரணத்தினால், அவர்களின் சாதனையை பாராட்டி மடிக்கணினிகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, 2022-2023ம் கல்வியாண்டில் விங்ஸ் டு பிளை திட்டத்தின் மூலம் சென்னை பள்ளிகளில் “தொழில் முனைவோர் திறன் மேம்பாடு”என்ற தலைப்பில் மூன்று நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. முதல் சுற்றில் பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 478 மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இறுதிச் சுற்றுக்கான போட்டிகளில் தேர்வு பெற்ற 9 மாணவ, மாணவியர் நாளை கல்விச்சுற்றுலாவாக ஐக்கிய அரபு நாடான துபாய்க்கு செல்ல உள்ளனர்.

2022-2023ஆம் கல்வியாண்டில் விங்ஸ் டு பிளை திட்டத்தின் மூலம் கல்விச்சுற்றுலாவாக ஐக்கிய அரபு நாடான துபாய்க்கு செல்லும் சென்னை பள்ளி மாணவ, மாணவியர்களை மேயர் பிரியா நேற்று ரிப்பன் கட்டட வளாகத்தில் சந்தித்து வாழ்த்திப் பாராட்டினார். இந்தக் கல்வி சுற்றுலாவில் 10 ம் தேதி முதல் 11, 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் துபாயில் தொழில் நடத்தும் நிறுவனங்கள் மற்றும் முக்கிய இடங்களை இந்த மாணவர்கள் பார்வையிட்டு, மே 14ம் தேதி சென்னை திரும்புகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, 2022-23ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாணவ, மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த புலியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மேயர்பிரியா நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) விஸ்வநாதன் , ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் கிழக்கு செயலாளர் பிரபுராம், விங்ஸ் டு பிளை திட்டத் தலைவர் ராதிகா மற்றும் கல்வி அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விங்ஸ் டு பிளை திட்டத்தில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 9 பேர் நாளை துபாய் பயணம் appeared first on Dinakaran.

Tags : Corporation School ,Dubai ,Wings ,Fly ,Chennai ,Chennai Corporation ,Education Department ,Rotary Club of Madras East ,Wings to Fly ,
× RELATED வியாசர்பாடி எம்.கே.பி. நகர் மாநகராட்சி...