×

வீட்டில் தூங்கிய இளம்பெண் மர்மச்சாவு போலீசில் சகோதரி புகார்

வந்தவாசி, மே 8: வந்தவாசி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது சகோதரி போலீசில் புகார் செய்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொவளை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அம்மு(32). இவர்கள் இருவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 5ம் தேதி கிராமத்தில் திருவிழா நடந்தது. இதையொட்டி நடந்த தெருக்கூத்து நாடகத்தை கணவன், மனைவி இருவரும் பார்த்துவிட்டு அதிகாலையில் வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் செந்தில், மாட்டுக்கு தண்ணீர் காட்ட மனைவி அம்முவை எழுப்பி உள்ளார்.

அப்போது, அம்மு தனக்கு அசதியாக உள்ளதாகவும், நீங்களே சென்று மாட்டிற்கு தண்ணீர் காட்டி விடுங்கள் என கூறினாராம். எனவே, செந்தில் மாட்டிற்கு தண்ணீர் காட்டி விட்டு, பிறகு விவசாய வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர், மதியம் வீட்டிற்கு வந்தபோது அம்மு படுக்கையில் இருந்ததால் சந்தேகம் அடைந்த செந்தில் எழுப்பி பார்த்துள்ளார். ஆனால், அம்மு கண் விழிக்கவில்லை. இதனால், செந்தில் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அம்முவை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அம்மு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து அம்முவின் சகோதரி செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா மல்லியங்கரணை கிராமத்தை சேர்ந்த லட்சுமி(34) என்பவர் கீழ்கொடுங்காலூர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்கு பதிவு செய்து, அம்மு மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post வீட்டில் தூங்கிய இளம்பெண் மர்மச்சாவு போலீசில் சகோதரி புகார் appeared first on Dinakaran.

Tags : Marmacau police ,Vandavasi ,
× RELATED (தி.மலை) கர்ப்பமாக்கி கடத்திய நெல்...