சென்னை:சாதிய வன்கொடுமைகள் குறித்து பட்டியலினத்தவர்கள் அளிக்கும் புகார்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகள் குறித்து, அந்தந்த கலெக்டர் தலைமையில் செயல்படும் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு கண்காணிப்புக்குழு ஆய்வு மேற்கொள்ளும். மேலும், பாதிக்கப்பட்ட பட்டியலினத்தவர்களுக்கு சமூக, பொருளாதார ரீதியாகவும், அரசின் நிவாரண உதவி கிடைக்கவும், சம்பந்தப்பட்ட வழக்கில் உதவி செய்யவும் இந்தக்குழு துணையாக இருக்கும். இந்த கண்காணிப்புக்குழுவில் அரசு சார்பில் அதிகாரிகளும், அரசு சாரா உறுப்பினர்களும் இருப்பார்கள்.
இந்நிலையில், ‘‘பட்டியலினத்தவர்கள் கொடுக்கும் வன்கொடுமை புகார்கள் மீது விசாரணை மேற்கொள்ளும் போலீசார், புகாரில் உண்மை இல்லை என புகாரை முடித்து விடுவதாகவும், போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவும் ஒப்புதல் அளித்து விடுவதாகவும்’’ தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு புகார்கள் சென்றது. குறிப்பாக, திருப்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பூவாத்தாள் என்பவர் கொடுத்த புகார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மீதான விசாரணையின்போது தான் வன்கொடுமை வழக்குகள் புகாரில் உண்மை இல்லை என போலீசார் முடிவுக்கு வரும் போது, அதற்கு மாவட்ட கண்காணிப்பு குழு ஒப்புதல் அளிப்பதும் தெரியவந்தது.
‘‘வன்கொடுமை வழக்குகள் தொடர்பான புகாரில் உண்மை இல்லை என போலீசார் முடிவுக்கு வந்தாலும் அதற்கு ஒப்புதல் அளிக்க மாவட்ட கண்காணிப்புக் குழுவுக்கு அதிகாரம் இல்லாத நிலையில், போலீசாரின் நடவடிக்கைக்கு மாவட்ட கண்காணிப்புக்குழு எப்படி ஒப்புதல் அளிக்க முடியும்’’ என்று ஆணையம் கேள்வி எழுப்பியது.மேலும், இதுதொடர்பாக மாவட்ட அளவில் வன்கொடுமை கண்காணிப்புக்குழுவின் தலைவராக செயல்படும் கலெக்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மா, தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பிக்கு அனுப்பிய கடிதத்தில்: பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கை பொறுத்தமட்டில் புகாரில் உண்மை இல்லை என அந்த வழக்கை போலீசார் முடிவுக்கு கொண்டு வந்தாலும், அதற்கு ஒப்புதல் அளிக்க மாவட்ட கண்காணிப்புக்கு குழுவுக்கு அதிகாரம் இல்லை. புகாரில் உண்மை இல்லை என்ற போலீசாரின் முடிவு சரியானதா? இல்லையா? என்பதை சம்பந்தப்பட்ட நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். எனவே இந்த விவகாரத்தில் கலெக்டர்கள் உரிய கவனத்துடன் செயல்பட அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வன்கொடுமை வழக்குகளை ரத்து செய்ய மாவட்ட கண்காணிப்பு குழுவுக்கு அதிகாரம் இல்லை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.
