×

கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை 162 மாணவிகளின் வாக்குமூலம் பதிவு: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னை: கலாஷேத்ரா நடன கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 162 மாணவிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அடையாறு அனைத்து மகளிர் போலீசார், கல்லூரியின் நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மனை ஏப்ரல் 3ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வளர்ச்சியை பிடிக்காத சக ஆசிரியர்கள், மாணவிகளை தூண்டி விட்டு ஹரி பத்மனுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளதாகவும், 2019ம் ஆண்டு சம்பவம் நடந்ததாக கூறி, 4 ஆண்டுகளுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஹரிபத்மன் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக 162 மாணவிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள், ஹரிபத்மன் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது. ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என்று வாதிடப்பட்டது. தமிழ்நாடு மகளிர் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 103 மாணவிகளிடம் விசாரித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். விசாரணை குழுவை மாற்றியமைக்க கோரி 7 மாணவிகள் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் ஜூன் 15ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது என்றார். வாதங்களை கேட்ட நீதிபதி, ஹரிபத்மனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அப்போது, இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்ற ஹரிபத்மன் தரப்பு கோரிக்கையை நீதிபதி நிராகரித்து உத்தரவிட்டார். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது.

The post கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை 162 மாணவிகளின் வாக்குமூலம் பதிவு: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Kalashethra College ,Chennai ,Dalashethra Dance College ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...