×

வயல்வெளிப் பள்ளிகளால் விவசாயிகளுக்கு அதிக பலன்கள் வேளாண் துறை தகவல்

 

பழநி, மே 4: வயல்வெளிப் பள்ளியின் விளைவுகள் குறித்து பழநி தொப்பம்பட்டி வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். விவசாயிகள் வயல்வெளிப் பள்ளியின் மூலம் தங்களது வயல்களில் பூச்சி, நோயினை எதிர்த்து, சுற்றுச்சூழலை அனுசரித்து நன்கு வளர்ந்து நல்ல மகசூலைக் கொடுக்கக்கூடிய ரகங்களை தேர்ந்தெடுக்கும் திறனை வளர்ததுக் கொள்ளலாம். நட்டவுடன் பச்சை பிடிக்கும் வளமான நாற்றுகளை தயாரிக்க கற்றுக் கொள்ளலாம்.

தனது வயலில் மண் தன்மையிலேயே இயற்கை உரங்களையும், ரசாயன உரங்களையும், உயிர் உரங்களையும் சரியான விகிதத்தில் சேர்த்து, சரியான தருணத்தில் இட்டு, அதிக மகசூல் எடுக்க தெரிந்து கொள்ளலாம். பயிர் வளர்ச்சியில் பல முக்கிய பருவங்களைக் கண்டறிந்து அந்த பருவங்களில் செய்ய வேண்டிய செய்நேர்த்திகளை செய்ய அறிந்து கொள்ளலாம். பயிர் வளர்ச்சியில் எந்தெந்த பருவத்தில் களைகள் இருக்கக்கூடாது என தெரிந்து களைகளைக் கட்டுப்படுத்த தெரிந்து கொள்ளலாம்.

பயிரின் எந்த பருவத்திற்கு நீர்த்தேவை, எந்த பருவத்தில் நீர் தேவையில்லை என்பதை அறிந்து, அதன்படி நீர் மேலாண்மை செய்ய தெரிந்து கொள்ளலாம். தரமான மற்றும் அதிக மகசூலுக்கு சரியான தருணத்தில் அறுவடை செய்ய கற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் இதுதொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களையோ, வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாமென தொப்பம்பட்டி வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post வயல்வெளிப் பள்ளிகளால் விவசாயிகளுக்கு அதிக பலன்கள் வேளாண் துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Agriculture Department ,Palani ,Department of Agriculture ,Palani Thoppampatti ,Department ,Dinakaran ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து