ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் அருகே கடற்கரை பகுதியில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் அடுத்துள்ள அக்காள்மடம் கடற்கரை ஓரம் உள்ள காட்டுப் பகுதியில் வெடிகுண்டு புதையல் இருப்பதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில், கியூ பிரிவு, எஸ்பி தனிப்பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து சிறப்பு வெடிகுண்டு சோதனை மற்றும் தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்ட காவல் சிறப்புப் படையினர், சிறப்பு புலனாய்வுத் துறையும் சென்னை குழுவுடன் இணைந்து தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். கடற்கரை ஓரத்தில் மணல் பகுதி மற்றும் பனங்காடுகளில் வெடிகுண்டு புதைக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் குவியல் குவியலாக வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.
The post ராமேஸ்வரம் அருகே கடற்கரையோரம் வெடிகுண்டு புதையல் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!! appeared first on Dinakaran.
