×

காங்கிரஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் கட்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சித்ரதுர்கா: காங்கிரஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் கட்சி. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்த போது நாட்டின் பாதுகாப்பு படைகள் குறித்து குறை கூறி கேள்வி எழுப்பியவர்கள் அவர்கள் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். கர்நாடக மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். சித்ரதுர்கா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: காங்கிரஸ் மற்றும் மஜத தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் ஆதரிக்கும் கட்சி. இந்த கட்சிகள் கர்நாடக மாநிலத்தில் முதலீடை உயர்த்தி இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க சாத்தியமேயில்லை. தீவிரவாதிகளின் முதுகெலும்பை உடைத்து அவர்களுக்கான ஆதரவை தகர்த்தெறிந்தது பாஜ.

காங்கிரஸ் ஓய்வு பெற்ற முதல்வர் வேட்பாளரான சித்தராமையாவை வைத்துக்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறது. இவர் கடந்த தேர்தலின் போதே எனது கடைசி தேர்தல் இது தான் என்று கூறியவர். இதனால், மக்களை தூண்டுவதற்காக புதிய குற்றச்சாட்டை கையில் எடுத்தார்கள். லிங்காயத்து வகுப்பினரையும், பிற்படுத்தப்பட்டோரையும் அவதூறு பேசினார்கள். அவர்கள் 90 முறை என்னை அவமதித்துள்ளார்கள். தற்போது அது செஞ்சுரியை நோக்கி பயணித்துக்கொண்டுள்ளது. பாஜ தேர்தல் அறிக்கை வளர்ச்சியை புளுபிரிண்ட் எடுத்தது போன்று இருக்கிறது. இது கர்நாடக மாநிலத்தை முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கான திட்டம். நவீன உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம். இளைஞர்கள், பெண்களுக்கு சுயஅதிகாரம் தரும் வகையில் இருக்கிறது. பாஜவுடன் வளர்ச்சி திட்டங்களில் காங்கிரசால் போட்டி போட முடியாது’ என்றார்.

* அனுமன் பக்தர்களுக்கு தடை விதிக்க காங்கிரஸ் திட்டம்
விஜயநகர மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,, ‘நான் பக்த அனுமன் பூமிக்கு வந்துள்ளேன். அனுமன் பிறந்த நிலத்தில் எனது மரியாதையை காட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே நேரம், நான் ஹனுமன் பூமியில் வந்திறங்கிய போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானது. அதில் ஹனுமனை வழிபடும் பஜ்ரங்தள் அமைப்புக்கு தடை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் காங்கிரஸ் கட்சியினர் ராமரை தடை செய்தார்கள். தற்போது ஜெய் பஜ்ரங்தள் பாலி என்று அனுமன் புகழ்பாடும் பக்தர்களுக்கு தடை விதிக்க சபதம் ஏற்றுள்ளார்கள்’ இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் பாஜ தலைவர்கள் பலரும் பஜ்ரங் தளம் தடை குறித்த காங்கிரஸ் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

The post காங்கிரஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் கட்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,PM Modi ,Chitradurga ,Surgical Strike ,
× RELATED சொல்லிட்டாங்க…