×

தெளிவு பெறு ஓம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

?குலதெய்வம், குலதேவதை இதற்கான வேறுபாடுகள் என்ன? இரண்டும் ஒன்றா?

– ஹரிணி, திருப்பதி.

குலதெய்வம் – குலதேவதை இரண்டும் ஒன்றுதான். குலதெய்வம், பார்வையில் படாமல் மறைந்திருந்து அருள்செய்வது. கனவில் வந்து வழிகாட்டி அருள் செய்வது. குலதேவதை, முன்பின் அறியாத யார் மூலமாவது நம் குறைகளைத் தீர்க்கும்போது, வீடுதேடி வந்து நம் துயரங்களை தீர்க்கும்போது அது குலதேவதை.

? கோயில்களில் பலிபீடம் என்று ஒரு இடம் இருக்கிறதே அதன் காரணம் என்ன?

– குருபிரசாத், தாராபுரம்.

ஆசா-பாசங்களை நீக்கும்-பலியிடும் இடம் பலிபீடம். அவ்வாறு நீக்கியதும் நம் அறச்செயல்கள் வாகனமாக இருந்து, நமக்குத் தெய்வ அருள் கிடைக்க வழி செய்கின்றன. ‘ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும் சாடி விட்ட குதிரை போல் தாமே வந்து நிற்குமே’ என சிவவாக்கியர், அறச்செயல்கள் வாகனமாக முன்வந்து அருள் புரிவதைக் குறிப்பிடுகிறார். இதைக் குறிக்கும் முகமாகவே, ஆலயங்களில் பலிபீடத்தை அனுசரித்து வாகனங்கள் அமைந்துள்ளன.

? குலதெய்வ வழிபாடு வருடாவருடம் செய்யவேண்டுமா? குலதெய்வ வழிபாட்டினை எப்படி செய்யலாம், ஏதாவது முறைகள் இருக்கின்றனவா?

– பார்த்திபன், சென்னை.

குலதெய்வக் கோயில் அருகில் இருந்தால், நாள்தோறும் அல்லது வாரத்தில் ஒருநாள் அல்லது மாதாமாதம் பிறந்த நட்சத்திரத்தன்று, புண்ணிய தினங்களில் குலதெய்வ வழிபாடு செய்யலாம். குலதெய்வக் கோயில் தூரத்தில் இருந்தால், ஆண்டிற்கு ஒரு முறையாவது சென்று வழிபாடு செய்ய வேண்டும். வழிபாட்டு முறைகளை முன்னோர்கள் செய்த முறைகளின்படி, அவர்களிடம் கேட்டு அறிந்து செய்ய
வேண்டும்.

?மூலஸ்தானத்தில் உள்ள இறைவனுக்கு உள்ள சக்தி, கொடிக் கம்பத்தில் உள்ளது என்று கூறுவது சரியா?

– வண்ணை கணேசன், சென்னை.

சரிதான். ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட மூலஸ்தானப் பீடத்தின் அடியில் நவரத்தினங்கள், மந்திரயந்திரங்கள் ஆகியவை இருக்கும். ‘உருவேறத் திருவேறும்’ என்ற வாக்கின்படி, மூலஸ்தானத்தில் சொல்லப்படும் மந்திரங்களின் ஆற்றல், அதிர்வலைகள் அப்படியே மூலஸ்தானப் பீடத்தின் அடியில் இருக்கும். நவரத்தினங்கள், மந்திர யந்திரங்கள் ஆகியவற்றில் சேரும். அவ்வாறு சேரும் அந்த சக்தியை, ஆற்றலை, அதிர்வலைகளை, கொடிமரம் (துவஜஸ்தம்பம்) இழுத்துத் தனக்கு அடியில் வைத்துக் கொள்ளும்.

கொடி மரத்தின் அடியில் நாம் தலைவைத்து வணங்கும் போது, அங்குள்ள அதிர்வலைகள் தலை வழியாக நம் உடலுக்குள் பாய்கின்றன. நலங்கள் செய்கின்றன. இதன் காரணமாகவே கோயில்களின் உள்ளே வேற எந்த பகுதிகளிலும் விழுந்து வணங்கக் கூடாது என்ற ஆகமங்கள், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து வணங்க வேண்டும் என்று கூறி இருக்கின்றன.

?மற்ற பௌர்ணமிகளைக் காட்டிலும், சித்ரா பௌர்ணமி சிறப்பாகக் கருதப்படுவதன் தாத்பர்யம் என்ன?

– த. சத்தியநாராயணன், அயன்புரம்.

சித்ரா பௌர்ணமியன்று நடந்த நிகழ்வுகள், நடக்கும் அதிசய நிகழ்வுகள் பல. ஒரு சிலவற்றை பார்க்கலாம்.

1) தேவேந்திரன் தன் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய மதுரை சொக்கநாதரை, இன்றும் சித்ரா பௌர்ணமி தோறும் வந்து வழிபாடு செய்கிறார். தோஷம் நீக்கும் நாள் சித்ரா பௌர்ணமி.

2) அழகர் ஆற்றில் இறங்கும் விழா, `சுதபஸ்’ என்ற முனிவருக்குத் துர்வாசர் கொடுத்த சாபத்தைத் தீர்த்து, அவருக்கு அருள் செய்வதற்காகப் பகவான் எழுந்தருளினார். ‘அழகர் ஆற்றில் இறங்கும் விழா’ என்று விமரிசையாகக் கொண்டாடப் படும் இதுவும், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டே நிகழ்கிறது. பெரும் சாபங்களைத் தீர்க்கும் நாள் `சித்ரா பௌர்ணமி’.

3) சித்தர் பௌர்ணமி எனும் சித்ரா பௌர்ணமி, சித்ரா பௌர்ணமியன்று ஒருசில ஊர்களில், இரவில் முழுநிலா வெளிச்சத்தில், பூமியில் இருந்து ஒரு வகையான சக்தி வாய்ந்த உப்பு வெளிப்படும். இது ‘பூமிநாதம்’ எனப்படும். மருந்துகளுக்கு அதிக சக்தியை அளிக்கும் இந்த உப்பு, ரசாயன மருத்துவத்துறையில் உபயோகப்படுகிறது. இந்த உப்பு `சித்ரா பௌர்ணமியன்று’ வெளிப்படுவதை்கண்டு பிடித்தவர்கள் சித்தர்கள். இதனால் சித்ரா பௌர்ணமியை ‘சித்தர் பௌர்ணமி’ என்றும் கூறுவார்கள். சித்ரா பௌர்ணமி பல விதங்களிலும் விசேஷமானது. நாம் பார்த்தது சிலவே.

? அருளை அள்ளி வழங்கும் ஆலயங்கள் பல இருக்கும்போது, சில கோயில்களை மட்டும் ‘பரிகாரக் கோயில்கள்’ என்று கூறுவது ஏன்?

– ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

சூரியன் முதலான நவக்கிரகங்கள், நட்சத்திரத் தேவதைகள், முனிவர்கள், தேவர்கள், தேவதைகள் என்போர் எல்லாம் வந்து, திருத்தலங்களில் வழிபாடுசெய்து, தங்கள் துயர் நீங்கப் பெற்றார்கள். சூரியன் முதலான அவர்கள் துயர் தீர்த்த திருத்தலங்கள் ‘பரிகாரத் தலங்கள்’ எனப்படுகின்றன.

?கும்பாபிஷேகம் செய்யும்போது, கருடாழ்வார் வர வேண்டும் என்கிறார்களே ஏன்?

– வ. மீனாட்சி சுந்தரம், உலகம்பட்டி சிவகங்கை.

கருடன், வேதத்தின் வடிவம். பகவானான பரவாசு தேவனையே தாங்கும் பாக்கியம் பெற்றவர். ‘‘பறவைகளில் நான் கருடனாக இருக்கிறேன்’’ என்று பகவான் கண்ணன் பகவத் கீதையில் சொல்லி இருக்கிறார். வேத மயமான மந்திரங்களைச் சொல்லி, வேதங்களால் துதிக்கப்படும் தெய்வத்திற்குக் கும்பாபிஷேகம் நடக்கும்போது, வேத வடிவான கருடன் வராமல் இருப்பாரா? நிச்சயம் வருவார்! கருடனைப் பற்றிய விரிவான வரலாறு மற்றும் தகவல்கள், வியாச பாரதத்தில் இடம் பெற்றுள்ளன.

? ஆலயங்களில் மூலவரைத்தவிர, பிரகாரங் களில் என்னென்ன தெய்வங்கள் சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன? மூலவரை மட்டும் வழிபட்டால் போதுமா?

– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.

ஆலயங்களில் மூலவரைச்சுற்றி, அந்தந்தத் தெய்வங்களுக்கு உண்டான ஆகமங்களில் சொல்லப்பட்டபடி, சுற்றுப்புறத் தெய்வங்கள், கோஷ்ட தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். முதலில் இவர்களை எல்லாம் வலம்வந்து தரிசித்து, அதன் பிறகே மூலவரின் தரிசனம். நேரே மூலவர் சந்நதிக்குச் சென்று வழிபாட்டை முடித்து, அப்படியே திரும்புவது மரபல்ல. கோஷ்ட பிராகார தெய்வங்களையும், அததற்கு உரிய முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்.

தொகுப்பு: சந்திரமௌலி

The post தெளிவு பெறு ஓம் appeared first on Dinakaran.

Tags : Kuladeavam ,Kuladevata ,Harini ,Tirapati ,Kuladevayam ,
× RELATED திருச்சி பீம நகரில் வாலிபர் திடீர் மாயம்