சென்னை: மதிமுகவில் உள்ள 99.9 சதவீதம் பேருக்கு கட்சியை இணைக்கும் எண்ணம் இல்லை என்று வைகோ தெரிவித்தார். மதிமுகவின் அவைத் தலைவர் துரைசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதம் மதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை, எழும்பூரில் நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 70% மதிமுக உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. எந்த இடத்திலும் சிறு சலசலப்பு கூட இல்லை. இந்த காலகட்டத்தில் கட்சிக்குள் குழப்பம் இருப்பதுபோல, இல்லாத ஒரு செய்தியை செய்தி ஆக்க முயற்சி செய்தார்கள். அது தோற்றுப் போய் விட்டது. எனவே இந்த சூழ்நிலையில் மதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு முன்பை விட வேகமாக செல்லக்கூடிய நடவடிக்கையை மேற்கொள்ளும். திருப்பூர் துரைசாமி கட்சியில் இருக்கிறாரா என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.
2 வருடமாக வராதவர் இப்போது அறிக்கை கொடுக்கிறார் என்றால் அது நல்ல நோக்கத்திலா இருக்க முடியும். அவருக்கு வேண்டும் என்றால் அப்படி ஒரு எண்ணம் இருக்கலாம். கட்சியில் இருக்கும் 99.9 சதவீதம் பேருக்கு கட்சியை இணைக்கும் எண்ணம் இல்லை. இது தான் தமிழ்நாடு முழுவதும் மதிமுக தொண்டர்களின் உணர்வு. 30 வருடம் நாங்கள் போராடி பயணித்து வந்துவிட்டோம். எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறோம். இதையும் கடந்து செல்வோம். துரைசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு; நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம். சிலவற்றை நிராகரிக்கிறோம். ஜனநாயகப்படி கட்சி நடைபெற்று வருகிறது. கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. விரும்புகிறவர்கள் பொறுப்புக்கு வருகிறார்கள். இதற்கு மேல் நான் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பேச விரும்பவில்லை. இவ்வாறு வைகோ கூறினார்.
The post 99.9 சதவீதம் பேருக்கு கட்சியை இணைக்கும் எண்ணம் இல்லை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி appeared first on Dinakaran.
