×

மைனஸ் விலை இனி கிடையாது என்இசிசி அறிவிக்கும் விலைக்கே பண்ணைகளில் முட்டை விற்பனை: கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் அறிவிப்பு

நாமக்கல்: தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் சிங்கராஜ் நேற்று நாமக்கல்லில் அளித்த பேட்டி: நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகளுக்கு, என்இசிசி (தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு) விலை நிர்ணயம் செய்து வருகிறது. கோழிப்பண்ணை தொழிலில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் முட்டை வியாபாரிகள் இணைந்து, மைனஸ் விலையை அறிவித்து வந்தனர். சில மாதமாக மைனஸ் விலை அதிகம் போனதால், பண்ணையாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே என்இசிசி மட்டும் தான், முட்டை விலையை நிர்ணயம் செய்யவேண்டும் என பெரும்பாலான பண்ணையாளர்கள் தெரிவித்தனர். அதை ஏற்று, இன்று (நேற்று) முதல் மைனஸ் இல்லாத முட்டை விலையை என்இசிசி நிர்ணயம் செய்துள்ளது. இதை அனைத்து பண்ணையாளர்கள் அமைப்பினர், வியாபாரிகள் ஏற்று கொண்டனர். என்இசிசி நிர்ணயம் செய்யும் விலைக்கு தான் பண்ணைகளில் முட்டை லோடு செய்யப்படும்.

தினமும் மாலை 6 மணிக்கு, என்இசிசி முட்டை விலை நிர்ணயம் செய்யும் என்ற அறிவிப்பை அனைத்து பண்ணையாளர்களும் ஏற்றுகொண்டனர். கோழிப்பண்ணைகளில் சேகரிக்கப்படும் பெரிய முட்டையை விட, எக்ஸ்போர்ட் முட்டைக்கு 10 காசு குறைவாக என்இசிசி விலை நிர்ணயம் செய்யும். பண்ணைகளில் ஒரு முட்டை உற்பத்தி செலவு 450 காசாக இருக்கிறது. தற்போதைய சூழலில் கடைகளில் ஒரு முட்டை 450 காசுக்கு கிடைக்கும். கடந்த 5 ஆண்டுக்கு முன்பு, மைனஸ் இல்லாத என்இசிசி விலை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் மைனஸ் இல்லாத விலை கொண்டு வரப்பட்டுள்ளது. பண்ணையாளர்கள் என்இசிசி விலையை பின்பற்றாவிட்டால், எதிர்காலத்தில் கோழிப்பண்ணை தொழில் பெரும் நஷ்டத்தை சந்திக்கும். எனவே, இனி மைனஸ் விலை வராது என்றார். 5 காசு உயர்வு: இந்நிலையில் முட்டை விலையை 405 காசில் இருந்து 410 காசாக என்இசிசி நேற்று நிர்ணயம் செய்தது.

The post மைனஸ் விலை இனி கிடையாது என்இசிசி அறிவிக்கும் விலைக்கே பண்ணைகளில் முட்டை விற்பனை: கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : NECC ,Poultry Association ,Namakkal ,Tamil Nadu Kabbage Rankers Society ,Singaraj ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...