×

திருவண்ணாமலைகோயிலில் சித்ரா பௌர்ணமி விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி விழா முன்னேற்பாடு பணிகள் மற்றும் திருக்கோயில் பெருந்திட்டம் (மாஸ்டர் பிளான்) செயலாக்கம் குறித்து அமைச்சர்கள் எ.வ. வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இன்று (30.04.2023), பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கள ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பெருந்திட்டம் (மாஸ்டர் பிளான்) குறித்து ஆய்வுக் கூட்டம் அமைச்சர் பெருமக்கள் எ.வ.வேலு மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, திருக்கோயில் நிர்வாகத்தின்மூலம் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. இந்தாண்டு சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கிரிவலத்திற்கும், சுவாமி தரிசனத்திற்கும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்கள் சிரமமின்றி, விரைவாக தரிசனம் செய்திடும் வகையில் தரிசன வரிசை முறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள், மின் விளக்கு வசதிகள், திருக்கோயில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதையில் தேவையான மருத்துவக் குழுக்கள், அவசர ஊர்தி வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், குப்பைகளை உடனுக்குடன் அகற்றிடும் வகையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை ஒருங்கிணைந்து செய்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் அறிவுரையின்படியும் இன்றைய தினம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துறையின் செயலாளர், ஆணையர், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் ரிஷிவந்தியத்தில் அமைந்துள்ள 800 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு ராஜ நாராயணபெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களை ஆய்வு செய்தோம். அத்திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்திடவும், திருக்கோயில் குளங்களை புனரமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும் உரிய ஆலோசனைகளை வழங்கி உள்ளோம்.

அதனைத் தொடர்ந்து இந்த மாவட்டத்தின் அமைச்சர் அவர்கள், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான 23 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான இடத்தினை ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றியே தீர்வது முனைப்போடு செயல்பட்டு ஆக்கிரமிப்பாளரின் பிடியிலிருந்து மீட்டெடுத்திருக்கின்றார். அந்த இடத்தினை பார்வையிட்டு, மாவட்ட அமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி ரூ. 2 கோடி செலவில் அம்மணி அம்மாள் மண்டபம் புதுப்பிக்கப்படுவதோடு மீதம் இருக்கின்ற காலி இடத்தை திருக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்களின் வசதிக்கு ஏற்றார் போல் பயன்படுத்துவது குறித்து பார்வையிட்டோம். இத்திருக்கோயிலின் சார்பில் அமைக்கப்பட இருக்கின்ற ஒருங்கிணைந்த பசு மடத்திற்கான இடத்தை பார்வையிட்டோம்.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோவில் சுவாமி தரிசனத்திற்கும், கிரிவலம் வருவதற்கும் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது தொடர்பாகவும், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பெருந்திட்ட வரைவு (மாஸ்டர் பிளான்) செயல்படுத்துதல் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது, திருப்பதி கோயில் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் அதைச் சுற்றி நிறைய இடங்கள் இருக்கிறது. திருவண்ணாமலை கோயிலை சுற்றி அதிகளவு குடியிருப்புகள் தான் இருக்கின்றன.ஆகவே திருவண்ணாமலையில் திருப்பதிக்கு நிகராக வருகின்ற பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை எந்த அளவிற்கு செய்து தர முடியுமோ அதை செய்து தருவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வோம்.

அதேபோல் இந்த ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்புகளில் 4 திருக்கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு என்று நேரத்தை ஒதுக்குவது என்று முடிவு செய்து அறிவித்திருக்கின்றோம். அதில் ஒன்றான திருவண்ணாமலை திருக்கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு உண்டான நேர ஒதுக்கீட்டை எந்த நேரத்தில் செயல்படுத்துவது எப்படி செயல்படுத்துவது என்றும் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறோம். இத்திருக்கோயிலை படிப்படியாக திருப்பதிக்கு நிகராக மாற்றத்தை ஏற்படுத்துவது தான் இந்து சமய அறநிலையத்துறையின் நோக்கமாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்ற திருக்கோயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில் மாவட்ட அமைச்சர் அண்ணன் எ.வ.வேலு இத்திருக்கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதோடு, ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். அதன்படி பக்தர்களுக்கு என்னென்ன வசதிகளை செய்து தர முடியுமோ அவ அனைத்தையும் இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுத்து செய்து தரும்.

இத்திருக்கோயில் அறங்காவலர் குழு நியமனத்தை பொறுத்தளவில் நூற்றுக்கணக்கான நபர்கள் அறங்காவலர்களுக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். அவை அனைத்தையும் பரிசீலித்திட ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மடாதிபதிகள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு பரிசீலனை செய்து அறிக்கை அளித்தபின் விரைவில் அறங்காவலர்களை நியமிப்போம். மாவட்ட அறங்காவலர் குழுக்களை பொறுத்தளவில் இதுவரை 30 மாவட்டங்களுக்கு அறங்காவலர் குழுக்களை நியமித்து இருகின்றோம். அக்குழுக்களின் வாயிலாக பரம்பரை அறங்காவலர்கள் அல்லாத சட்டப்பிரிவு 46(1), 46(2) மற்றும் 49(1) கீழ் வருகின்ற திருக்கோயில்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமித்து இருக்கின்றோம்.

அறங்காவலர்களை நியமிக்கப்படுகின்ற பணி படிப்படியாக விரைவுபடுத்தப்படும். இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை சுமார் ரூ. 4,250 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டெடுத்து இருக்கின்றோம். இந்த மீட்பு வேட்டை என்பது தொடரும். இந்த ஆண்டு திருவண்ணாமலை அம்மணி அம்மாள் மண்டபம் மற்றும் சென்னை, தம்புசெட்டி தெருவில் இலவச மருத்துவமனை அமைத்திட சாமுண்டீஸ்வரி அம்மாள் வழங்கிய இடம் என அதிக மதிப்பிலான 2 இடங்களை சட்டப் போராட்டம் நடத்தி மீட்டெடுத்திருக்கின்றோம்.

ஆக்கிரமிப்பில் இருக்கின்ற இடங்களையெல்லாம் மீட்டெடுத்து பக்தர்கள் பயன்பாட்டிற்கும், திருக்கோவிலுக்கு வருமானத்தை ஈட்டுகின்ற பணிகளையும் தான் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலையில் மீட்கப்பட்ட இந்த இடத்தை பக்தர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற இடமாக உருவாக்குவோம். இது போன்ற இடங்களை மீட்கின்ற போது சிறிய இடங்களாக இருந்தால் பார்க்கிங் வசதிகளுக்கு பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் தருவோம்.

தரிசன வரிசை நீண்டிருந்தால்தான் விரைவு தரிசனம் ஏற்படும். நிச்சயமாக நீண்ட வரிசையில் நிற்பதற்கு உண்டான வசதிகளை இப்பொழுது ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதேபோல இடைத்தரகர்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவதற்கு உண்டான சூழ்நிலையை ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றோம். வனச் சட்டத்தின்படி திருக்கோயிலுக்கு புதிதாக யானையை பெறுவது என்றால் சட்டத்தில் இடமில்லை. ஏற்கனவே அனுமதி பெற்று வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் தானமாக திருக்கோயில்களுக்கு அளித்தால் தான் இந்த யானைகளை ஏற்றுக் கொள்ள முடியும். அப்படி யாராவது தானமாக யானைகளை திருக்கோயிலுக்கு கொடுக்க முன் வந்தால் நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம்.

புதிதாக திருக்கோவிலுக்கு யானைகளை தரக்கூடாது என நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது அதை எதிர்த்து அரசின் அனுமதியை பெற்று இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீடு செய்ய உள்ளது என்று தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு,தி.சரவணன், ஒ. ஜோதி, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., தி மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன், இ.கா.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவண்ணாமலைகோயிலில் சித்ரா பௌர்ணமி விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chitra Bournami Festival ,Thiruvandamalaikoil ,Tiruvannamalai ,Tirukoil ,Chitra Poornami Festival ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி...