×

ஐ.ஐ.டி, என்.ஐ.டி உட்பட ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை: ஐ.ஐ.டி., என்.ஐ.டி உட்பட ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு முடிவுகளை நேற்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. அந்தவகையில் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என 2 கட்டங்களில் கணினி வாயிலாக நடத்தி வருகிறது. இதில் முதன்மைத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 24, 25, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 தேதிகளிலும், கடந்த 6, 8, 10, 11, 12, 13 மற்றும் 15ம் தேதிகளிலும் என பி.இ, பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மை தாள்-1 தேர்வு 2 முறை நடத்தப்பட்டது.

இதில் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்வை 8 லட்சத்து 60 ஆயிரத்து 64 பேர் எழுத விண்ணப்பித்த நிலையில், 8 லட்சத்து 23 ஆயிரத்து 967 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவு கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இம்மாதத்தின் 2-வது வாரத்தில் நடத்தப்பட்ட ஜே.இ.இ. முதன்மைத் தேர்வை எழுத 9 லட்சத்து 31 ஆயிரத்து 334 பேர் எழுத விண்ணப்பித்து, 8 லட்சத்து 83 ஆயிரத்து 367 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டு இருக்கிறது. இதில் 100 சதவீத மதிப்பெண்ணை 43 மாணவ-மாணவிகள் பெற்று இருக்கிறார்கள். முதல் இடத்தில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சிங்கராஜூ வெங்கட் கவுன்டினியாவும், அதற்கடுத்தபடியாக ஆந்திரா, கள்ளக்குரி சேர்ந்த சாய்நாத் ஸ்ரீமந்த், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இஷான் காண்டல்வல், உத்திரபிரதேசத்தை சேர்ந்த தேஷாங் பிரதாப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வரிசையில் தமிழ்நாட்டை சேர்ந்த என்.கே.விஸ்வாஜித் என்ற மாணவர் 100 சதவீத மதிப்பெண்ணுடன் 24-வது இடத்தில் உள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இவர் தான் முதல் இடத்தில் இருக்கிறார். 2 முறை நடந்த தேர்வுகளில் எதில் சிறந்த மதிப்பெண்களாக இருக்கிறதோ, அதை மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. ஆகிய பிரிவினர்களுக்கான ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு தாள்-1-க்++கான கட்-ஆப் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டு இருக்கிறது.தேர்வர்கள் www.nta.ac.in, https://jeemain.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ.முதன்மை தாள்-2ஏ, தாள்-2பி தேர்வுக்கான முடிவு தனியாக பின்னர் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.

The post ஐ.ஐ.டி, என்.ஐ.டி உட்பட ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : GI GI D ,N. GI J.D. ,Union Government ,National Examination Agency ,I. GI T. ,N.D. GI J.D. ,GI D, ,T.D. ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...