×

மனித வாழ்க்கை முறை வேதங்களில் உள்ளது சமஸ்கிருதம் நாட்டின் அனைத்து மொழிகளுக்கும் தாய் போன்றது

*பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பேச்சு

திருமலை : மனித வாழ்க்கை முறை வேதங்களில் உள்ளது என்றும், சமஸ்கிருதம் நாட்டின் அனைத்து மொழிகளுக்கும் தாய் போன்றது என்றும் பட்டமளிப்பு விழாவில் ஆளூநர் பேசினார்.
ஸ்ரீவெங்கடேஸ்வரா வேதப் பல்கலைக்கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழா திருப்பதி மகதி அரங்கில் நேற்று நடைபெற்றது. துணைவேந்தர் ராணிசதாசிவமூர்த்தி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக பதிவாளர் ஆச்சார்யா ராதே ஷியாம் முன்னிலை வகித்தார். ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 390 மாணவ, மாணவிகளுக்கு இளங்கலை பட்டமும், 125 முதுகலை பட்டமும், 8 எம்பில் பட்டமும், 16 பிஎச்டி பட்டமும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து தேசிய அளவில் விளையாட்டு, கலாச்சார பாடங்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளில் சிறந்த திறனை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது:
வேதங்களில் ஆன்மிக அறிவும் தொழில்நுட்ப அறிவும் உள்ளதாக கூறப்படுகிறது. வேதக்கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சமுதாயத்திற்கு வழிகாட்டியாக வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், நமது முன்னோர்கள் வேதங்களின் வேதக் கூறுகளை கணிதம், அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றுடன் இணைத்து உலகுக்கு அறிவித்தனர். பழங்கால ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் நமது அறிவுச் செல்வத்தை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்ல தேவஸ்தானம் முயற்சித்து வருகிறது.
நமது பாரம்பரிய வேதக் கல்வியே, இந்தியா உலக அறிவின் மையமாக நிற்பதற்குக் காரணம்.

வேதங்கள், இதிகாசங்கள் மற்றும் கலைகள் மனித வாழ்க்கைத் திறன்களுடன் தொடர்புடையவை. வேத மரபு என்பது வேதங்களில் மறைந்திருக்கும் அறிவுச் செல்வத்தை வெளிக்கொணர வாழும் மரபு என்று அழைக்கப்படுகிறது ஸ்ரீவெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகம் மேலும் அதிகமாகச் வேத வளர்ச்சிக்கு செயல்பட வேண்டும். சமஸ்கிருதம் அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய் போன்றது. சமஸ்கிருத மொழி உலகின் பிற மொழிகளில் செல்வாக்கு செலுத்துகிறது என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாரம்பரியத்திற்கும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால், நாடு மேலும் வளர்ச்சி அடையும். இந்த நோக்கத்தில்தான் இந்திய மனிதவளத் துறை இந்திய அறிவியல் கொள்கை மற்றும் பாரதிய பாஷா சமிதி ஆகிய துறைகளை உருவாக்கியுள்ளது. அறிவின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்த முயற்சிகளில் ஆராய்ச்சிகள் ஒரு முக்கிய பகுதியாகும்.

இயற்கையோடு வாழ பழங்கால அறிவியல் நமக்குக் கற்றுத் தந்துள்ளது. விவசாயத்தில் ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால் மனித குலத்துக்குப் பெரும் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே பழங்கால ஓலைச்சுவடி, நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துரைத்து விவசாயிகளை அந்த திசையில் வழிநடத்துவது அனைவரின் பொறுப்பாகும்.

பூச்சிக்கொல்லி மருந்தின்றி மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் சாகுபடியை பண்டைய வேதங்கள் நமக்கு அளித்துள்ளன. நம் நாட்டில் இன்னும் சில கிராமங்களில் சமஸ்கிருதம் பேசுகின்றனர். அந்த கிராமத்து மக்கள் இன்றும் சமஸ்கிருதத்தில் படித்து செய்வதைத் தவிர, அதே மொழியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து ஐதராபாத்தைச் சேர்ந்த வேத அறிஞர் பிரம்மஸ்ரீ, வி.சுப்ரமணிய சாஸ்திரி லஷ்மண ஞானபதி, சென்னையைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ ஆர்.மணி திராவிட சாஸ்திரி ஆகியோருக்கு ஆளுநர் விருது வழங்கினார். இதில் செயல் அதிகாரி தர்மா, இணை செயல் அதிகாரி சதா பார்கவி, டிஇஒ பாஸ்கர், பல்கலைக்கழக இசி உறுப்பினர்கள் ஆச்சார்யா ஹரே கிருஷ்ண சதபதி, டீன் ஆச்சார்யா பானி யாசுலு, பிஆர்ஓ ஆச்சார்யா பிரம்மச்சார்யா, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

The post மனித வாழ்க்கை முறை வேதங்களில் உள்ளது சமஸ்கிருதம் நாட்டின் அனைத்து மொழிகளுக்கும் தாய் போன்றது appeared first on Dinakaran.

Tags : Governor ,Tirumala ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...