×

25 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் எதிரொலி வால்பாறை அரசு பள்ளி சத்துணவு அரிசி பருப்பு ஆய்விற்கு எடுத்து செல்லப்பட்டது

வால்பாறை : வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று முன்தினம் சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் 25 பேர் வாந்தி,மயக்கம் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 7 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சத்துணவு சமைக்க பயன்படுத்தப்பட்ட அரிசி,பருப்பு உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்விற்காக எடுத்து சென்றனர்.

வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட பின் 25 மாணவர்கள் வாந்தி மற்றும் மயக்கத்திற்கு உள்ளாகினர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆம்புலன்ஸ் மூலம் முதற்கட்டமாக 25 பேரை பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மாணவ,மாணவிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை அளித்தனர். இதில் பலர் உடனடியாக உடல் நலம் தேறினர். அதிக வாந்தி எடுத்த 7 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவின் பேரில் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இதே போல சப்.கலெக்டர் பிரியங்காவும் மாணவ,மாணவிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவமனை அதிகாரிகள், அலுவலர்களை சந்தித்து சிறப்பாக பணிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தெடர்ந்து மாவட்ட செயலாளர் பள்ளி வளாகத்திற்கு சென்று மாணவர்களிடம் நலம் விசாரித்து, சத்துணவு மையத்தை ஆய்வு செய்தார்.அவருடன் மாநில செயற்குழு உறுப்பினர் அமுதபாரதி, நகர செயலாளர் சுதாகர், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத் தலைவர் செந்தில், மாவட்ட துணை செயலாளர் ஈ.கா.பொன்னுசாமி, கவுன்சிலர்கள் அன்பரசன், ஜேபிஆர் பாஸ்கர், பொருளாளர் அம்பிகை சுப்பையா, நகர துணை செயலாளர் சரவணபாண்டியன், முன்னாள் நகராட்சி தலைவர் செல்வி விஜயராஜன், கார்த்தி, சாய்கிருஷ்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சப்.கலெக்டர் பிரியங்கா, மாவட்ட கலெக்டரின் சத்துணவு தனி உதவி அலுவலர், தாசில்தார் ஜோதி பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பள்ளியின் சத்துணவு கூடத்தை ஆய்வு செய்து, அரிசி,பருப்பு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை ஆய்விற்கு எடுத்து சென்றனர். சத்துணவு பொறுப்பாளரிடம் தண்ணீைர கொதிக்க வைத்து கொடுக்க வேண்டும், கவனமாக கையாளவேண்டும் என அறிவுரை வழங்கினர். மேலும் நகராட்சிக்கு சென்று இச்சம்பவம் நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் வெங்கடாச்சலம் (பொ) குறித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தினர்.

The post 25 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் எதிரொலி வால்பாறை அரசு பள்ளி சத்துணவு அரிசி பருப்பு ஆய்விற்கு எடுத்து செல்லப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Walbara Government School Nutrition ,WALBARA ,Valbara Puravakshi Union Elementary School ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழா வால்பாறையில்...