×

சென்னை மேம்பாட்டிற்கான திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்..!

சென்னை: சென்னை மேம்பாட்டிற்கான திட்டங்களுக்கான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி இன்று (28.4.2023) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி. கே. சேகர்பாபு தலைமையில் 2023-24 நிதியாண்டிற்கான அறிவிப்புகளில் சென்னைப் பெருநகரப் பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளின் பணிகளை செயல்படுத்தும் விதமாக பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் கட்டிட வடிவமைப்பாளர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-24 நிதியாண்டிற்கான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகளை அறிவித்தார். இதில் சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 25.4.2023 அன்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் வடசென்னை பகுதிகளான சென்னை கொண்டித்தோப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையம் அமைத்தல், தண்டயார்பேட்டையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் மற்றும் பணிமனை அமைத்தல், காசிமேடு கடற்கரையை ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல், மற்றும் மூலகொத்தளத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைத்தல் போன்ற திட்டங்களுக்காக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இன்று (28.04.2023) அமைச்சர் அவர்களின் தலைமையில் மேற்கண்ட இத்திட்டங்களை செயல்படுத்திட திட்டங்களின் வடிவமைப்பு, திட்டக்கூறுகள், திட்டங்களில் அளிக்கப்படும் பொது வசதிகள், அவற்றின் பராமரிப்புத் தேவைகள், பயனாளிகளுக்கான வசதிகள் ஆகியவற்றை பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் கட்டிட வடிவமைப்பாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, இத்திட்டங்களுக்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளுவதற்கு அமைச்சர் அலுவலர்களை வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர், சென்னைப் பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.அமிர்த ஜோதி, பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம். சிவகுரு பிரபாகரன், பெருநகர சென்னை மாநகராட்சி நகரமைப்புக் குழுத் தலைவர் இளைய அருணா, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் (பொ) இளங்கோவன், அரசு சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.தேரணிராஜன், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பாலாஜி, சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை மேம்பாட்டிற்கான திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்..! appeared first on Dinakaran.

Tags : Minister ,Segarbabu ,Chennai Chennai ,Chennai ,Chief Minister ,BD G.K. ,Stalin ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...