![]()
மண்டபம்: கடந்த ஏப்.15ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், டார்ச் லைட் ஒளியில் அரிப்பு வலை மீன்பிடியால் சூடை மீன் இனம் வளம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்கள் உள்ளன. இந்த 13 கடலோர மாவட்டங்கள் 1076 கி.மீ தூரம் கடற்கரை கொண்டுள்ளன. இவற்றில் உள்ள 608 மீனவ கிராமங்களில் 10 லட்சம் மீனவ குடும்பங்கள் கடல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வசித்து வருகின்றனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் 237 கிமீ தூர கடற்கரை பகுதிகளை கொண்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், வேதாளை, புதுமடம், கீழக்கரை, ஏர்வாடி, கீழமுந்தல், நரிப்பையூர், தேவிபட்டினம், தொண்டி, காரங்காடு, மோர்பண்ணை, உப்பூர் என 20க்கும் மேற்பட்ட மீன்பிடி இறங்கு தளங்களில் 4 ஆயிரத்து 600 நாட்டு படகுகள், ஆயிரத்து 600 விசைப்படகுகள் மீனவர்கள் சுழற்சி முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன. தென் கடல் எனப்படும் மன்னார் வளைகுடா கடலில் வெள்ளிக்கிழமை வார ஓய்வு நாள் தவிர 6 நாள், வட கடல் எனப்படும் பாக்ஜலசந்தியில் வெள்ளிக்கிழமை வார ஓய்வு நாள் தவிர சனி, திங்கள், புதன் என ஒரு நாள் விட்டு ஒரு நாள் என சுழற்சி முறை மீன்பிடி நடைபெறுகிறது. இங்கு 170 மீனவ கிராமங்களில் 2.10 லட்சம் மீனவ மக்கள் வசித்து வகின்றனர்.
தமிழகத்தில் உள்ள மீனவ சமுதாய மக்களில் 22 சதவிகிதம் பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். 1.66 லட்சம் டன் மீன் பிடிக்கப்படுகின்றன. இறால், நண்டு, கணவாய், வாவல் உள்ளிட்ட ஏற்றுமதி ரக மீன்கள் வெளிநாடுகளுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் மீன் ஏற்றுமதியில் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதன்மை இடம் வகிக்கிறது. இந்நிலையில், கடல் வளத்தை காக்கவும், மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் பரிந்துரைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்.15 முதல் ஜூன் 15 வரை 60 நாள் என விசைப்படகு மீன்பிடி தடைக்காலம் தற்போது அமல் உள்ளது.
இக்கால கட்டத்தில் தூண்டில், வீச்சு வலை, நாட்டுப்படகு உள்ளிட்ட பாரம்பரிய மீன்பிடி முறை அனுமதிக்கப்பட்டுள்ளது. 5 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நாட்டுப்படகு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தற்போது புதிய வகையை கையாண்டு வருகின்றனர். இன்ஜின் பொருத்திய நாட்டுப்படகுகளில் இரவு வேளையில், தொழிலுக்குச் செல்லும் இவர்கள் சுமார் ஒரு நாட்டிக்கல் மைல் தூரம் சென்று அதிக திறன் வாய்ந்த டார்ச் லைட் ஒளியை கடலில் பாய்ச்சுகின்றனர். கண்கள் கூசும் இந்த ஒளிக்கு கடலின் பிற பகுதிகளில் காணப்படும் சூடை மீன் குஞ்சுகள் கூட்டம், கூட்டமாக குவிகின்றன. இதையடுத்து, இந்த மீன்களை பிடிக்க தயாரித்த பிரத்யேக அரிப்பு வலை மூலம் கிலோ கணக்கில் அள்ளி வருகின்றனர். இத்தகைய மீன்பிடி முறையில், சூடை மீன்களின் இனப்பெருக்கம் அழிந்து வருவதாக உரிய வலை மூலம் தொழிலுக்குச் செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக மண்டபம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில், இரவு நேரங்களில் ஒரு சில நாட்டுப் படகுகள் மின்விளக்குகள் வைத்து மீன்பிடிப்பதாக தகவல் வருகின்றன. மின்விளக்குகள் வைத்து மீன் பிடிக்கக் கூடாது. அவ்வாறு மீன் பிடித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
The post மண்டபம் கடலில் டார்ச் லைட் ஒளி மீன்பிடிப்பால் அழியும் சூடை மீன் இனம் appeared first on Dinakaran.
