×

திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் ₹10க்கு மஞ்சப்பை விற்பனை: மாவட்ட கலெக்டர் துவங்கி வைத்தார்

 

திருத்தணி, ஏப். 27: ₹10க்கு மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை சுப்பிரமணியசுவாமி கோயிலில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கிஸ் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் முதன் முறையாக மஞ்சள் பை இயந்திரம் அமைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் தொழிற்சாலைகள் நிதியுதவியுடன் 6 மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், திருவள்ளூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மஞ்சள்பை இயந்திரம் நிறுவப்பட்டது. இந்த மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில் ₹10 செலுத்தி ஒரு மஞ்சப்பையை பெற்றுக்கொள்ளலாம்.

இதன் துவக்கவிழா திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திலும் பிறகு வெவ்வேறு நாட்களில் 5 இடங்களில் நடைபெற்றன. இதனை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கிஸ் துவங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தின் மூலமாக திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று கலெக்டர் தொடங்கி வைத்தார். விழாவிற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமேகலை, உதவி பொறியாளர்கள் ரகுகுமார், சபரிநாதன் வரவேற்றனர்.

திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் விஜயா முன்னிலை வகித்தார். அந்த இயந்திரத்தின் மூலம் மஞ்சப்பைகளை விற்பனை செய்யும் போது சேகரிக்கப்படும் தொகை மஞ்சள் துணி பைகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும். இந்தமுறையில் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை நிலையான முறையில் பராமரிக்கமுடியும். இரண்டு புதிய ₹5 நாணயங்கள், அல்லது ஒரு ₹10 நாணயம் அல்லது ஒரு ₹10 நோட்டை செலுத்தி துணிப்பைகளை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

The post திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் ₹10க்கு மஞ்சப்பை விற்பனை: மாவட்ட கலெக்டர் துவங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Subramaniaswamy ,Temple ,Manjapai ,Alby ,John Varghese ,Tiruthani Subramaniaswamy Temple ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் வாகன நெரிசல்: பக்தர்கள் அவதி