×

மணல் கடத்தல் குறித்து போலீசில் புகார் அளித்ததால் அலுவலகத்தில் புகுந்து விஏஓ வெட்டிக் கொலை:ஒருவர் கைது,மற்றொருவருக்கு வலை

செய்துங்கநல்லூர்:மணல் கடத்தல் தொடர்பாக போலீசில் புகார் செய்ததால் கிராம நிர்வாக அலுவலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம்,வல்லநாடு அருகே முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ)பணியாற்றியவர் லூர்து பிரான்சிஸ் (56).இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.தாமிரபரணி ஆற்றில் இருந்து கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு டூவீலரில் மணலை கடத்தியதை பார்த்த விஏஓ லூர்து பிரான்சிஸ்,முறப்பநாடு போலீசில் கடந்த 13ம் தேதி புகார் அளித்தார்.போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார்.

அப்போது உள்ளே வந்த இருவர்,அரிவாளால் லூர்து பிரான்சிசை சரமாரியாக வெட்டினர்.அவர்களில் ஒருவர் என் மீது எப்படி காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பாய் எனக் கேட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
தகவலறிந்து முறப்பநாடு போலீசார் வந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த விஏஓவை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ்,எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.இதனிடையே சிகிச்சை பலனின்றி விஏஓ லூர்து பிரான்சிஸ் இறந்தார்.இதையடுத்து ராமசுப்புவை போலீசார் கைது செய்தனர்.

மற்றொருவரை தேடி வருகின்றனர். இதற்கு முன்பு ஆதிச்சநல்லூர் விஏஓவாக லூர்து பிரான்சிஸ் இருந்த போது அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்ய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிலர், கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து அவரை தாக்கினர்.இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் 2 ஆண்டுக்கு முன்பு முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அவர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் ஆறுதல்: தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி, வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஏஓவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சத்தை ஈமச்சடங்கிற்காக விஏஓ குடும்பத்தாரிடம் வழங்கினார். கனிமொழி எம்பி கூறுகையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

* ரூ.1 கோடி நிதி உதவி: முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அளித்த புகாரின் பேரில், கடந்த வாரம் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு அவரை வெட்டியதாக தெரிய வருகிறது. பணியில் இருக்கும்போது அவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கெல்லாம் மிகுந்த துயரத்தை அளித்துள்ளது. தம் கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு நன்றி: முதல்வரின் அறிவிப்புக்கு தமிழ்நாடு விஏஓ சங்க மாநில பொதுச்செயலாளர் ரா.அருள்ராஜ் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

The post மணல் கடத்தல் குறித்து போலீசில் புகார் அளித்ததால் அலுவலகத்தில் புகுந்து விஏஓ வெட்டிக் கொலை:ஒருவர் கைது,மற்றொருவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : VAO ,Village Administrative Officer ,Vettib ,Thuthukudi District ,Vallanadu ,
× RELATED காட்டுமன்னார் கோயில் அருகே...