×

200 விவசாயிகளுக்கு தீவன விதை தொகுப்பு

 

சேலம், ஏப். 25: சேலம் ஆவினில் 200 விவசாயிகளுக்கு ₹10 ஆயிரம் மதிப்புள்ள தீவன விதை தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறது என அதிகாிரகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 30 இடங்களில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து சேகரிக்கப்படும் பால், ஆவின் பால் பண்ணைகளில் சுத்திகரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியமானது, 800 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. 2.5 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் 4.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தினமும் உள்ளுர் தேவைக்கு 2.10லட்சம் லிட்டர் பால் பாக்கெட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னைக்கு 2 லட்சம் லிட்டர் அனுப்பப்படுகிறது. மீதியுள்ள பாலை பால் பவுடராகவும், நெய், இனிப்பு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அளவில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் பால் கொள்முதலில் சேலம் ஆவின் முதல் இடத்தைபெற்றுள்ளது. ஆவின் நிறுவனம், பால் மற்றும் பால் உப பொருட்களான நெய், பால் பவுடர், பன்னீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், நறுமணபால் வகைகள், ஐஸ்கிரீம், குல்பி, சாக்லெட்மற்றும் பிஸ்கட் வகைகள் விற்பனை செய்து வருகிறது. இதனிடையே சேலம் ஆவினில் பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையில், பால் வழங்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆவினில் பால் வழங்கும் விவசாயிகளுக்கு கறவை மாடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தாலுகா வாரியாக விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், பழங்குடியின, ஆதிதிராவிடர் மக்களுக்கு தீவன விதைகள் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: சேலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ் செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் இருந்து பால் வழங்கும் ஆதிதிராவிடர், பழங்குடியின உறுப்பினர்களின் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதை தொகுப்பு மற்றும் புல்கரணைகள் பயிர் செய்ய பயனாளி ஒருவருக்கு ₹10 ஆயிரம் (ஏக்கருக்கு) வழங்கப்படுகிறது. தீவனப்புல் வளர்க்க 165 ஆதிதிராவிடர்கள், 25 பழங்குடியினத்தை சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கலெக்டர் தலைமையிலான குழு பயனாளிகளை தேர்வு செய்யும். ஆதி திராவிடர், பழங்குடியின இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினராக இருக்க வேண்டும். ஒரு பயனாளிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ₹10 ஆயிரம் மதிப்புள்ள தீவன விதைகள், தீவன கரணைகள் வழங்கப்படும். பால் வழங்கும் உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு கால்நடை பராமரிப்புகடன், கறவை கடன் தலா ₹14 ஆயிரம் வீதம் ₹1.50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர் துறை முலம் ₹65 லட்சம் கறவை மாடு வாங்க கடன் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post 200 விவசாயிகளுக்கு தீவன விதை தொகுப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Awain.… ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை