×

ரூ.4.65 கோடி மதிப்பில் பெரியாறு கால்வாய் சீரமைப்பு பணிகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்

 

அழகர்கோவில், ஏப். 25: மதுரையை அடுத்த மாங்குளம் கண்டமுத்துப்பட்டியில் பெரியாறு கால்வாய் மற்றும் அதன் பகிர்மான கால்வாய்களை, ரூ.4.65 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று துவக்கி வைத்தார்.மதுரையை அடுத்த மாங்குளம் கண்டமுத்துப்பட்டியில் நீர்வளத்துறை சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் அதன் பகிர்மான கால்வாய்களை புனரமைக்கும் பணிகளை நேற்று தொடங்கி வைத்தார். இதில் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் நேருபாண்டியன், அ.வல்லாளபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், வக்கீல் கலாநிதி, ஒன்றிய செயலாளர் மதிவாணன், கிழக்கு ஒன்றிய சேர்மன் மணிமேகலை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவபிரசாத், விவசாய சங்க தலைவர் சுந்தர் மற்றும் அரசு அதிகாரிகள கலந்து கொண்டனர்.

மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மாங்குளம் கிராமம் கண்டமுத்துப்பட்டியில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் அதன் பகிர்மான கால்வாய்களை புனரமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணி நபார்டு நிதியுதவியுடன் ரூ.4 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் மாங்குளம், சின்னமாங்குளம், கண்டமுத்துபட்டி மீனாட்சிபுரம், தேத்தம்படி ஆகிய 5 கிராமங்கள் மற்றும் மேலூர் தாலுகாவில் கிடாரிபட்டி, அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி, புலிப்பட்டி, எட்டிமங்கலம், சூரக்குண்டு, கல்லம்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகள் பயன்பெறும்.

இந்த பணிகளின் முடிவில், மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தாலுகாக்களில் உள்ள 15 கிராமங்களில் காணப்படும் 192 கண்மாய்களுக்கும் போதிய அளவில் நீர்வரத்து இருக்கும் என்பதால், இப்பகுதிகளில் உள்ள சுமார் 22 ஆயிரத்து 332 ஏக்கர் நிலம் முழுமையான பாசன வசதி பெறும். மேலும், இப்பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து, அப்பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வாழ்வாதாரம் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.4.65 கோடி மதிப்பில் பெரியாறு கால்வாய் சீரமைப்பு பணிகள் அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyar ,Alagarkoil ,Periyar canal ,Mankulam Kandamuthupatti ,Madurai ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...