×

என் நண்பர்கள்தான் என் சொத்து!

நன்றி குங்குமம் தோழி

அன்பே வா (பூமிகா) டெல்னா டேவிஸ்

‘‘நட்பு…. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. ஒருவரை நான் நட்புடன் ஏற்றுக் கொண்டால், அந்த உறவு காலம் முழுதும் இருக்க வேண்டும்னு நினைப்பேன். என்னுடன் தோழமையுடன் பழகியவங்க இன்றும் தொடர்பில் இருக்காங்க. அவங்கள யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். எந்த நிலையிலும் அவர்களை நான் இழக்க விரும்ப மாட்டேன்’’ என்று தன் நட்பு வட்டாரம் குறித்து மனம் திறக்கிறார் ‘அன்பே வா’ தொடரில் பூமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் டெல்னா டேவிஸ்.

‘‘அடிப்படையில் நான் ஒரு பரதக் கலைஞர். ஜர்னலிசம் முடிச்சிட்டு எல்.எல்.பி படிச்சிட்டு இருந்தேன். அப்பதான் எனக்கு ‘அன்பே வா’ தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் சீரியலுக்கு வருவதற்கு முன் தமிழ் மற்றும் மலையாளம் என எட்டுப் படங்களில் நடிச்சிருக்கேன். மாடலிங் மற்றும் விளம்பர படங்களிலும் நடிச்சிருக்கேன். சினிமாவில் இருந்து தான் நான் சீரியலுக்கே வந்தேன்னு சொல்லணும். கடைசியா நான் தமிழில் நடிச்ச படம் ‘குரங்கு பொம்மை’. ஒரு படத்தில் கவுண்டமணி சாருக்கு பெண்ணாக நடிச்சிருக்கேன்.

அப்ப நான் +2 படிச்சிட்டு இருந்தேன். அதன் பிறகு கல்லூரியில் சேர வேண்டும் என்பதால் மூன்று வருஷம் இன்டஸ்ட்ரியில் இருந்து பிரேக் எடுத்தேன். கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் மற்றும் விளம்பர படங்கள் மட்டும் அவ்வப்போது செய்து வந்தேன். என்னுடைய ஃபிரண்ட் ஒரு துணிக்கடை ஆரம்பிச்சா. அவளுக்காக நான் மாடலிங் செய்து கொடுத்தேன். அந்த விளம்பரத்தைப் பார்த்து தான் எனக்கு ‘அன்பே வா’வில் வாய்ப்பு கிடைச்சது. பூமிகா கதாபாத்திரத்திற்காக ஒரு வருஷம் ஆடிஷன் செய்திருக்காங்க. யாரும் செட்டாகல. கடைசியா என்னை தேர்வு செய்தாங்க.

என்னுடையது ரொம்ப சாதாரணமான குடும்பம். அப்பா பிசினஸ் மேன். அம்மா இல்லத்தரசி. ஒரு தங்கை. அவ நியுட்ரிஷன் குறித்து மைசூரில் படிக்கிறா. சொந்த ஊர், வீடு எல்லாம் கேரளாவில் இருந்தாலும், அவளுக்காக அம்மா, அப்பா இருவரும் மைசூரில் இருக்காங்க. நான் சென்னை, கேரளா, மைசூர்ன்னு ஒரு ரவுண்ட் அடிப்பேன். எனக்கு சின்ன வயசில் இருந்து கலை சார்ந்த விஷயம் மேல் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. முதலாம் வகுப்பு படிக்கும் போதே நான் ஸ்டேஜில் பர்பார்மென்ஸ் செய்ய ஆரம்பிச்சிட்டேன். 5ம் வகுப்பு படிக்கும் போது நடன போட்டிகளில் எல்லாம் கலந்து கொண்டேன். நிறைய போட்டிகளில் பங்குப் பெற்று பரிசு வாங்கி இருக்கேன்.

அந்த சமயத்தில் தான் மீடியா துறையை சேர்ந்த மாணவர்கள் குறும்படம் ஒன்று எடுத்தாங்க. அதில் என்னை நடிக்க சொல்லி கேட்டாங்க. அவர்களுக்காக நடிச்சுக் கொடுத்தேன். அவங்க தான் நான் நன்றாக நடிப்பதால், சினிமாவில் கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும்ன்னு சொன்னாங்க. எனக்கு அதில் எப்படி வாய்ப்பு தேடணும்னு எல்லாம் தெரியாது. அதனால் சும்மா ஒரு போர்ட்போலியோ எடுக்கலாம்ன்னு என் புகைப்படங்களை எடுத்து வச்சேன். அந்த புகைப்படத்தைப் பார்த்து தான் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் நடிச்சேன்’’ என்றவர் தன்னுடைய நட்பு வட்டாரம் குறித்து பேச ஆரம்பித்தார்.

‘‘எனக்கு கிடைத்த முதல் ஃபிரண்ட்ஷிப் இன்றும் தொடர்கிறது. முதலாம் வகுப்பில் தான் நான் சோனியாவை சந்திச்சேன். என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட் அவ. அப்ப எங்க வகுப்பு பாடத்திற்கு கைட் மாதிரி ஒரு புக் இருக்கும். அதில் தான் பாடத்தின் கேள்விகளுக்கான விடை இருக்கும். அந்த புத்தகம் என்னிடம் இல்லை, சோனியா வச்சிருந்தா. நான் விடை எழுத எனக்கு அவ குடுப்பா. அப்படித்தான் எங்களுடைய நட்பு துளிர ஆரம்பித்தது. நானும் அவளும் பத்தாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் தான் படிச்சோம்.

நாங்க நாலாவது படிக்கும் போது நடந்த சம்பவம். ஸ்கூலில் டூருக்கு அழைச்சிட்டு போனாங்க. அவ வீட்டில அனுப்பலன்னு சொல்லிட்டாங்க. அவ அப்படி சொன்னதும் என் மனசு உடைஞ்சு போயிடுச்சு. அவ வீட்டுக்கு ஃபோன் செய்து, அவ அப்பாகிட்ட அழுது கெஞ்சி சம்மதிக்க வச்சேன். அப்ப எனக்கு தோணுச்சு சோனியாவோட நட்பை வாழ்க்கையில் இழந்திடக்கூடாதுன்னு. அதன் பிறகு +1, +2 நாங்க வேற பள்ளியில் படிச்சோம். ஆனால் ஒரே கல்லூரியில் சேர்ந்தோம். இருவரும் வேற துறை என்றாலும், ஒன்னாதான் போவோம் வருவோம். மதிய உணவு ஒன்னாதான் சாப்பிடுவோம். அந்த சமயதில் நான் மாடலிங் செய்திட்டு இருந்தேன்.

மலையாளத்தில் சூர்யா சேனலுக்காக ஒரு பிராஜக்ட். ஒரு நாள் முழுக்க ஷூட்டிங். அப்ப சோனியாவிடம் இருந்து எனக்கு ஃபோன் வந்தது. அவ அம்மா தவறிட்டாங்கன்னு. எனக்கு ஒன்னுமே புரியல. ஏன்னா இரண்டு நாள் முன்புதான் அவங்க எனக்காக ஊறுகாய் எல்லாம் போட்டுக் கொடுத்தாங்க. அவ்வளவு சந்தோஷமா சிரிச்சு பேசிட்டு இருந்தாங்க, அவங்க இழப்பை எதிர்பார்க்கவே இல்லை. ஒரு மூணு வருஷம் முன்புதான் அவ அப்பா இறந்தார்.

இப்ப அம்மா. ஒரு அண்ணன் வெளிநாட்டில் இருக்கான். இங்க கேரளாவில் அவ தனியா இருக்கணும். இதெல்லாம் நினைச்சு எனக்கு அழுகையா வந்தது. ஷூட்டிங் காரணமாக அந்த நேரத்தில் அவகூட இருக்க முடியாத சூழலில் மாட்டிக் கொண்டிருந்தேன். அன்று என்னுடைய அறிமுக சீன். நான் பேக்கப் செய்தா, மறுபடியும் எல்லாரையும் ஒன்று சேர்க்கணும். தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய இழப்பாயிடும். அறிமுகக் காட்சியில் எப்படி நடிச்சேன்னு தெரியல.

மனசெல்லாம் சோனியாவிடம்தான் இருந்தது. எப்படியோ நடிச்சு கொடுத்தேன். அப்போது இயக்குனர் என் நிலமையை புரிந்து கொண்டு என்னை அனுப்பி வைத்தார். எர்ணாகுளத்தில் இருந்து நான் திருச்சூர் போக குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாகும். இயக்குனர் பேக்கப் சொன்ன அடுத்த நிமிஷம் சோனியாவை பார்க்க கிளம்பிட்டேன். என்னைப் பார்த்ததும், கட்டிப்பிடித்துக் கொண்டு அழ ஆரம்பிச்சிட்டா. ரொம்ப உடைஞ்சி போயிருந்தா.

நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவகூடத்தான் இருப்பேன், நான் கடவுளிடம் வேண்டியது ஒரே விஷயம் தான். நல்ல கணவன், அன்பான மாமனார், மாமியார் அவளுக்கு அமையணும்னு என்பதுதான். என் வேண்டுதல் வீண் போகல. அன்பான கணவன், அழகான குழந்தை பாசத்தைக் கொட்டும் மாமனார், மாமியார் அவளுக்கு கிடைச்சிருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கா. இப்ப நான் கேரளா போனா அவளை பார்க்காம வர மாட்டேன்.

+1 மற்றும் +2 படிக்கும் போது ஒரு பொண்ணு, பையனின் நட்பு கிடைச்சது. அப்ப நான் மாடலிங், சினிமாவில் நடிச்சிட்டு இருந்தேன். எங்களுடையது கிராமம் என்பதால், அங்க இருப்பவர்கள் சினிமாவில் நடிப்பதை தவறா பார்ப்பாங்க. அதனால் வகுப்பில் இவங்க இரண்டு பேரைத் தவிர யாருமே என்னோட பேசமாட்டாங்க. எனக்கு அதுவே ரொம்ப வருத்தமா இருக்கும். இவங்கதான் என்னை சமாதானம் செய்வாங்க.

இப்ப அந்த பையன் கேரளாவில் சொந்தமா பிசினஸ் செய்றான். அவன் நான் சோர்ந்து இருக்கும் போது எல்லாம், நீ உன்னுடைய துறை மேல கவனம் செலுத்து. நீ முன்னேறி இருக்கும் போது அவங்க அதே இடத்தில் தான் இருப்பாங்கன்னு சொல்லி என்னை ஊக்குவிப்பான். கல்லூரியில் ஷாமிலி, ஷ்ரதான்னு இரண்டு பேரின் நட்பு கிடைச்சது. இருவருமே இப்ப ஜெர்மனியில் கல்யாணமாகி செட்டிலாயிட்டாங்க. ஷ்ரதாவுக்கு சொந்தமா தொழில் செய்யணும்னு விருப்பம். அவங்க பொட்டிக் விளம்பரத்தில் தான் நான் நடிச்சேன். இப்ப அவங்க ஜெர்மனியில் இருந்தாலும் ஆன்லைன் முறையில் பிசினஸ் செய்றாங்க. ஷாமிலியும் ஜெர்மனியில் ஆசிரியர் பணியில் இருக்காங்க. அவங்க ஊருக்கு வரும் போது போய் பார்ப்பேன். மற்றபடி போனில் தான் பேசிக்கொள்வோம்.

பெங்களூரில் எல்.எல்.பி படிக்கும் போது, ஆலியா மற்றும் ஷிவானியின் நட்பு கிடைச்சது. இரண்டு பேரும் நல்லா படிப்பாங்க. எங்க மூணு பேருக்குமே பாட புத்தகங்கள் தாண்டி, நிறைய விஷயங்களை படிச்சு தெரிஞ்சுக்கணும்னு நினைப்போம். நாங்க மூணு பேரும் வேற வேற ஊர். நான் கேரளா, ஒருத்தி ஐதராபாத், இன்னொருத்தி தமிழ்நாடு என்பதால், எங்க மூன்று பேரோட உணவகங்களை அங்கு தேடிப் போய் சாப்பிடுவோம். நந்தி ஹில்ஸ் எல்லாம் ஒன்றாக சுத்தி இருக்கோம்.

இண்டஸ்ட்ரி வந்த பிறகு நான் இந்த துறையை புரபஷனலாதான் பார்க்கிறேன். படிக்கும் போது நம்முடைய மனசு கள்ளங்கபடமில்லாமல் இருக்கும். எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் பழகுவாங்க. ஆனால் வளர்ந்து வரும் போது ரொம்ப பாதுகாப்பா இருக்கணும். நம் முன் சிரிச்சு பேசுறவங்க, நம்மைப் பற்றி பின்னால் தவறா சொல்லவும் வாய்ப்பு இருக்கு. அதனால் நான் ரொம்பவே கவனமா இருக்கேன். இங்கு எல்லோரிடமும் நல்லா பழகுவேன்.

ஆனால் ஒரு எல்லைக்கோட்டினை வரைந்திருக்கேன், அந்த கோட்டை பூஜாவிற்காக மட்டும் தகர்த்தி இருக்கேன். இந்த துறையில் நட்பு என்றால் அவளோட மட்டும் தான். இங்க ஷூட்டிங் வந்த போதுதான் அவளை முதலில் சந்தித்தேன். எங்களுக்குள் ஒரு உண்மையான பாண்டிங் இருப்பதை உணர்ந்தேன். மற்றபடி என்னுடைய நட்பு வட்டாரங்கள் என்னுடைய சின்ன வயசில் இருந்து வேரூன்றி இருக்கிறது.

எனக்கு இருக்கும் கையளவு நண்பர்களிடம் என்ன வேண்டும் என்றாலும் பேசலாம். எனக்கு ஒரு நல்ல விஷயம் நடந்தா முதலில் சந்தோஷப்படுவது அவங்களா தான் இருக்கும். பொறாமை இருக்காது. ஒளிவு மறைவு இருக்காது., ஊருக்கு போகும் போது அவங்கள பார்க்காம இருக்க மாட்டேன். நாங்க சந்திக்கும் அந்த தருணத்தில் ஃபோன் கூட எங்க கையில் இருக்காது. சும்மா உட்கார்ந்து மனசு விட்டு பேசினாலே போதும். அதில் கிடைக்கும் சந்தோஷத்திற்கு எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது. அவங்களோட எனக்கு நேரம் செலவழிக்க பிடிக்கும். அவங்க யாரையும் எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டேன். காலம் முழுக்க என்னுடன்தான் வச்சிருப்பேன். அவங்கதான் என் சொத்து’’ என்றவர் தன் எதிர்கால திட்டம் பற்றி
விவரித்தார்.

‘அன்பே வா’க்கு பிறகு நிறைய சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஒரு பிராஜக்ட் செய்தா… அதை நல்லபடியா செய்யணும். நிறைய கமிட் செய்திட்டா சரியா கவனம் செலுத்த முடியாது. அதனால் கொஞ்சம் நேரம் எடுத்து செய்யலாம்ன்னு இருக்கேன். அவசரப்படாமல் நிதானமா என்னுடைய கலைப் பயணம் தொடரும். இப்ப ஓ.டி.டியில் வெப்சீரீஸ் ஒன்றில் கமிட்டாகி இருக்கேன்’’ என்றார் டெல்னா டேவிஸ்.

தொகுப்பு : ப்ரியா

The post என் நண்பர்கள்தான் என் சொத்து! appeared first on Dinakaran.

Tags : Bhumika ,Delna Davis ,Dinakaran ,
× RELATED சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!