×

ஊட்டியில் பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகரிப்பு

ஊட்டி : ஊட்டியில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில், நகரில் பிச்சைக்காரர்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சா்வதேச சுற்றுலா தளமாக ஊட்டி உள்ளது. இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கோடை சீசன் காலமாகும். இந்த சமயத்தில் மிதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவார்கள். கோடை சீசன் சமயத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் ஊட்டியில் கோடை சீசன் துவங்கி விட்டாலே பிச்சைக்காரர்கள் அதிகளவு காணப்படுவார்கள். இவர்கள் நகரில் ஆங்காங்கு ஒரு சில பகுதிகளில் இருந்து கொண்டு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களிடம் பிச்சைக் கேட்டு தொந்தரவு செய்கின்றனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் இந்தாண்டுக்கான கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. ஆனால் வழக்கம் போல் ஊட்டி நகரின் முக்கிய இடங்கள், சுற்றுலா தளங்கள் உள்ள இடங்களில் பிச்சைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

ஆந்திரா உள்ளிட்ட சில வெளி மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு வந்து நகரின் பல்வேறு இடங்களில் நின்று பிச்சை எடுத்து வருகின்றனர். ஊட்டியில் கோடை சீசன் சமயத்தில் அதிகமானோர் வருவார்கள் என்பதை குறி வைத்து இவர்களை சிலர் அங்கிருந்து கொண்டு வந்து இங்கு விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இவர்கள் சிறுவர் கையில் குழந்தையுடன் பிச்சை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக தாவரவியல் பூங்கா, சேரிங்கிராஸ், ஏடிசி மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தற்போது பிச்சைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவர்கள் ஊட்டி நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே கோடை விழாக்கள் துவங்குவதற்கு முன்பு ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகளை தொந்தரவு செய்து வரும் பிச்சைக்காரர்கள், மனநலம் பாதித்தவர்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நகராட்சி சார்பில் கோடை விழா துவங்குவதற்கு முன்பு நகரில் உலா வரும் பிச்சைக்காரர்களை பிடித்து காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அதேபோல் இம்முறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஊட்டியில் பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Oodi ,Dinakaran ,
× RELATED முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!