×

ஒருங்கிணைப்பாளருக்கு முரணாக செயல்பட்டால் அதிமுக பொதுக்குழுவை கலைக்க ஓபிஎஸ்சுக்கு அதிகாரம் உள்ளது: பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் மிரட்டல்

திருச்சி: ஒருங்கிணைப்பாளருக்கு முரணாக செயல்பட்டால் அதிமுக பொதுக்குழுவை கலைக்க ஓபிஎஸ்சுக்கு அதிகாரம் உள்ளது’ என பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் மிரட்டல் விடுத்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் இன்று (24ம்தேதி) மாலை முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாடு திடலை நேற்று ஓபிஎஸ் அணி அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 1956ல் அண்ணா திருச்சியில் மாநாடு நடத்தினார். அந்த ஆண்டு தான் நான் திமுகவில் இணைந்தேன். அந்த மாநாட்டில் தான் திமுக தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்கிற வாக்கெடுப்பு நடந்து திமுக தேர்தல் நடந்தது. 67 ஆண்டுகளுக்கு பிறகு அறிஞர் அண்ணா வழியில் இந்த மாநாடு நடக்க உள்ளது. இது வரலாறு படைக்கும் மாநாடாக இருக்கும். அதிமுகவில் எடப்பாடியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்கிற பேச்சுக்கே இடமில்லை. எம்ஜிஆரிடம் உங்கள் அரசியல் வாரிசு யார்? என கேட்ட போது அதிமுகவின் தொண்டர்கள் தான் என் அரசியல் வாரிசு என்றார்.

அந்த வழியில் தொண்டர்களை அழைத்து உங்கள் இயக்கத்தை நீங்களே நடத்துங்கள் என கூறுவதற்கு தான் இந்த மாநாடு. ஒரு சிலர் பொதுக்குழுவை அவர்களே கூட்டி தலைமை கழக நிர்வாகிகளை நியமித்தார்கள். அது இட்டுக்கட்டிய சிறு கும்பல். அவர்களுக்கும் இந்த இயக்கத்துக்கும், தொண்டர்களுக்கும் சம்பந்தமில்லை. அதிமுக தனி தன்மை வாய்ந்தது. தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். தேர்தல் கமிஷன், சின்னம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இங்கு நிர்வாகம் முடங்கவே இல்லை. ஒருங்கிணைப்பாளருக்கு முரணாக செயல்பட்டால் அந்த பொதுக்குழுவை கலைக்க ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உள்ளது.

அதிமுக சட்ட விதிகளை புரிந்து கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள். அவர்களுக்கு புரிய வைக்கும் அளவுக்கு எங்களுக்கு சக்தி இல்லையோ என தோன்றுகிறது. அதிமுக தலைமை அலுவலகம், ஜானகி அம்மையார் எம்ஜிஆருக்கு கொடுத்தது. அது எடப்பாடி பழனி்சாமிக்கு சொந்தமானது அல்ல.
அந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் அதிமுகவின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் உரியது. எங்கள் தலைவரும், அண்ணியாரும் எங்களுக்கு கொடுத்த சீதனம் இது.

திருச்சியில் நாளை (இன்று) நடைபெறும் மாநாட்டிற்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் பங்கேற்பு குறித்து தற்பொழுது உறுதியாக எதுவும் கூற முடியாது. அதிமுகவில் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனி்சாமிக்கு இருக்கிறதா?, ஓபிஎஸ்சுக்கு இருக்கிறதா? என்பதை மாநாட்டின் மூலம் தெரிந்து கொள்வீர்கள். எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் எங்கள் மாநாட்டிற்கு மட்டுமல்ல, அதிமுகவிற்கே முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

*ஓபிஎஸ்சை எடப்பாடி கும்பிடுவதுபோல் பேனர்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் திருச்சியில் இன்று (ஏப். 24) மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மக்கள் கூடும் இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்து வருகின்றனர். ஓபிஎஸ்சின் சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்கள் 5க்கும் மேற்பட்ட இடங்களில் பேனர் வைத்திருந்தனர். இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை குனிந்து வணங்குவது போல் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பெரியகுளம் வடகரை போலீசில் புகாரளித்தனர். இதன்பேரில் பெரியகுளம் போலீசார், அந்த பேனர்களை நேற்று முன்தினம் இரவில் அதிரடியாக அகற்றினர்.

The post ஒருங்கிணைப்பாளருக்கு முரணாக செயல்பட்டால் அதிமுக பொதுக்குழுவை கலைக்க ஓபிஎஸ்சுக்கு அதிகாரம் உள்ளது: பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : OPS ,AIADMK ,Panruti Ramachandran ,Trichy ,AIADMK General Committee ,Panrutti Ramachandran ,
× RELATED சொல்லிட்டாங்க…