×

மனைவிக்கு டிரைவிங் கற்று தந்தபோது டிராக்டர் கவிழ்ந்து தம்பதி பரிதாப பலி

நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் அருகே மனைவிக்கு டிரைவிங் கற்றுத் தந்தபோது டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்து தம்பதி பலியாகினர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த பச்சுடையாம்பாளையம் அருகே மூலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(52), விவசாயி. இவரது மனைவி கீதா (45). இவர்களது மகன் பிரதீப்(19), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். சிவக்குமார் 5 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார். கோடை மழை மற்றும் சூறாவளிக்காற்றால் செடிகள் சேதமடையாமல் இருக்க, குச்சிகளை நடுவதற்கு முடிவு செய்தார். இதற்காக நேற்று, டிராக்டரில் குச்சிகளை ஏற்றிக்கொண்டு தோட்டத்திற்கு சென்றார். அவருடன் மனைவி கீதாவும் சென்றார்.

அங்கு குச்சிகளை இறக்கி விட்டு, வீட்டிற்கு புறப்படுவதற்காக டிராக்டரில் ஏறினர். அப்போது, சிவக்குமார், மனைவி கீதாவுக்கு டிராக்டர் ஓட்டுவதற்கு கற்றுக்கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் பரவலாக பெய்த மழை காரணமாக, நிலம் சேறும், சகதியுமாக இருந்தது. கீதாவால் சரியாக ஓட்ட முடியாமல் டிராக்டர் சேற்றில் சிக்கி, தலைக்குப்புற கவிழ்ந்தது.இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கிய இருவரும் உடல் நசுங்கி இறந்தனர். தகவலறிந்து நாமகிரிப்பேட்டை போலீசார் வந்து, தம்பதியின் உடல்களை மீட்டனர்.

The post மனைவிக்கு டிரைவிங் கற்று தந்தபோது டிராக்டர் கவிழ்ந்து தம்பதி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Namakirippet ,Rasipuram ,Namakkal district ,
× RELATED வாகன விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு...