×

பருத்தியில் மாவு பூச்சியினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

தா.பழூர்:பருத்தியை வெள்ளைத் தங்கம் என்றும் நாற்பயிர்களின் அரசன் என்றும் அழைக்கப்படுகின்றது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 8260 ஹெக்டர் பரப்பளவில் அளவில் பருத்தி பயிரிடப்பட்டு வருகின்றது. குறிப்பாக அரியலூர் மற்றும் தா.பழூர் வட்டாரங்களில் அதிக அளவு பருத்தி பயிரிடப்பட்டு வருகின்றது. தற்போது காய் புழு, அமெரிக்கன் காய்ப்புழு, புள்ளி காய்புழு, சிவப்பு காய் புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை அசுவினி மற்றும் இலைப்பேன் ஆகிய பூச்சிகளின் தாக்குதல் இருந்தாலும் குறிப்பாக மாவு பூச்சியின் தாக்குதல் 30 சதவீதம் அளவு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதனை விவசாயிகள் கட்டுப்படுத்த கிரீடு வேளாண் அறிவியல் மைய பயிர் பாதுகாப்பு வல்லனர் அசோக்குமார் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் பற்றி கூறி உள்ளார்.

மாவு பூச்சி தோன்ற காரணங்கள்: பருத்தி வயலில் களைச்செடிகள் அதிகமாக இருப்பது. மாவு பூச்சிகளை அழிக்கும் நன்மை செய்யும் பூச்சிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பது.பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும் இடைவெளி அதிகமாக இருப்பது. இந்த மாவு பூச்சியானது ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும் அதாவது 2006 ஆம் ஆண்டு குஜராத்திலும் 2007 ஆம் ஆண்டு பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களிலும் பருத்தியில் அதிக சேதத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த சில வருடங்களாக மாவு பூச்சியின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. மாவுப்பூச்சியின் இளம் உயிரி மற்றும் வளர்ந்த மாவு பூச்சியானது இலைகள், இலைக்காம்பு காணுவிடை பகுதி மற்றும் காய் பகுதிகளில் சாற்றினை உறிஞ்சி மகசூல் பாதிக்கப்படுகிறது. மாவு பூச்சி தாக்கப்பட்ட செடிகள் நன்கு வளராமல் குட்டையாக காணப்படும். வளர்ச்சி குன்றி புதர் போன்று தோற்றமளிக்கும் காய்களின் எண்ணிக்கை குறைந்து உருமாறி காணப்படும். மாவு பூச்சி பிசுபிசுப்பான திரவத்தினை சுரப்பதனால் இலைகளில் கரும்படல நோயினை ஏற்படுத்தி ஒளிச்சேர்க்கையை தடை செய்கிறது.

மாவு பூச்சியினை கட்டுப்படுத்த கோடை உழவு மேற்கொண்டு வேப்பம்புண்ணாக்கில் அடியுரமாக இட வேண்டும். விதைப்பதற்கு சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும். அறுவடைக்குப் பின்பு பருத்தி குச்சிகளை குவியலாக சேர்க்காமல் முறையாக அழித்தல் வேண்டும். பருத்தி வயல் ஓரங்களில் களைகளை அகற்றி சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். ரசாயன பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதை குறைத்து கார்டியாஸ்ட்டுஸ், பால்ஐஎஸ்ஏபிஎஸ், பொறி வண்டுகள், அனாகைரஸ் லேப்சி எனப்படும் ஒட்டுண்ணிகளை பாதுகாக்க வேண்டும். இரை விழுங்கிகளான பொரிவண்டுகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளான பச்சை கண்ணாடி இறக்கை பூச்சி முட்டை தொகுதிகள் 3 அட்டை (3000 முட்டைகள்) வீதம் / ஏக்கர் 20 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை வயலில் இட்டு தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க வேண்டும்.

மீன் எண்ணெய் ரெசின் சோப்பினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி கிராம் என்ற அளவில் கலந்து 20 நாட்கள் இடைவெளியில் வயலில் தெளிக்க வேண்டும். வெர்ட்டிசீலியம் லக்கானி என்னும் பூஞ்சானத்தை 5 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். முதலில் சுத்தமான நிரினை பருத்தியின் மீது தெளிக்க வேண்டும். பின்னர் 20 நிமிடம் கழித்து வேப்பங்கொட்டை சாறு 5 சதவீத கரைசலை தெளிப்பதன் மூலம் மாவு பூச்சியினை சிறப்பாக கட்டுப்படுத்தலாம். இந்த முறைகளை பயன்படுத்தி விவசாயிகள் பூச்சி தாக்கம் இன்றி பருத்தி சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம் என தெரிவித்தார்.

 

The post பருத்தியில் மாவு பூச்சியினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் appeared first on Dinakaran.

Tags : Pal ,Ariyalur district ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்டதொழில்நெறி...